பக்கம் எண் :

43

     7 திருமதில்களை அடைவதற்கு முன்னால் 8வது திருச்சுற்று ஒன்று
தற்போது 7 மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது.
இதற்கு அடைய வளைந்தான் திருச்சுற்று என்று பெயர். சப்த பிரகாரங்கள்
எனப்படும் 7 பிரகாரங்களுக்குள் இது அடங்காது.

     இந்த 8வது திருச்சுற்றில் தற்போதுள்ள மிக உயர்ந்த ராயர்கோபுரமான
தெற்கு கோபுரமே இந்தச் திருச்சுற்றின் நுழைவாயிலாகும். இந்த ராயர்
கோபுரம் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். கிருஷ்ண
தேவராயர் மிகச் சிறந்த விஷ்ணு பக்தர். வைணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு
கொண்ட மாமேதை. இவர் ஒரே சமயத்தில் நாடெங்கும் (அவரது ஆட்சிக்
காலத்தில்) 96 திருக்கோவில்களில் கோபுரம் கட்டும் பணியை
மேற்கொண்டார் என்று கூறுவர். தலைக்கோட்டை யுத்தத்தில் இவர் ஆட்சி
முறியடிக்கப்பட்டதும் பல கோபுரங்கள் பூர்த்தி அடையாமல் பாதியளவிலேயே
நின்று விட்டன.

     இவைகள் மொட்டைக் கோபுரம் என்றும் ராயர் கோபுரம் என்றும்
அழைக்கப்பட்டன.

     அடைய வளைந்தான் திருச்சுற்றில் பாதியளவில் நின்று போயிருந்த
ராயர் கோபுரத்தில் திருஷ்டிப் பரிகாரத்திற்கென்று முனிக்கு அப்பனான
ஸ்ரீனிவாசனை எழுந்தருளச் செய்திருந்தனர். இந்த ஸ்ரீனிவாசனுக்கு நித்ய
வழிபாடுகளும் நடைபெற்றன. இந்தக் கோபுர வாசலை முனியப்பன் கோட்டை
வாசல் என்றும் அழைத்தனர்.

     இந்த ராயர் கோபுரந்தான் இன்றைய இந்தியாவின் பெருமைக்கு சிகரம்
வைத்தாற்போன்று ஆசியாவிலேயே பெரிய கோபுரமாகக் கட்டப்பட்டு
திருப்பொலிவோடு செம்மாந்து நிற்கிறது. இவ்வளவு உயரமான கோபுரம்
வேறெந்த திவ்யதேசத்திலும் இல்லை.

     இக்கோபுரத்தைக் கட்டி முடிப்பதற்காகவே ஆந்திராவில் உள்ள ஸ்ரீ
அஹோபில மடத்தின் (சிங்கவேள் குன்றமென்னும் திவ்யதேசம் உள்ள இடம்)
41வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள், இங்கு வந்து
பன்னெடுங்காலந்தங்கி, பல எதிர்ப்புகளையும், இன்னல்களையும் தாண்டி,
பெரிய பெருமாளுக்கு பெரிய கோபுரத்தை நிர்மாணித்து ஒல்காத் தொல்புகழ்
பெற்றார்.