| 7 வது திருமதில் இதற்கு பூலோகம் என்று பெயர். இதற்கு ராஜவீதி, மாட மாளிகை வீதி, சித்திரைத் திருவீதி எனவும் பெயர்கள் உண்டு. இது தற்போது கடைகள், வீடுகள், கட்டிடங்கள், அலுவலகங்கள் சூழ ஒரு குறுநகரம் போல் தெரிகிறது. இதில் ஒரு கண்ணன் சன்னிதி, ஒரு ஆஞ்சநேயர் திருக்கோவில், வானமாமலை மண்டபம் ஆகியன உண்டு. 6வது திருமதில் புவர்லோகம் என்று அழைக்கப்படும் இத்திருச்சுற்று திருவிக்கிரமன் திருவீதி என்று அழைக்கப்படுகிறது. இது ஜவுளிக்கடைகளும், பாத்திரக்கடைகளும் நிறைந்து ஒரு பஜார் மாதிரி அமைந்துள்ளது. இந்த வீதியில் பெருமாள் திருவாகனங்கள் உலாப்போகும் காரணத்தால் இதற்கு உள் திருவீதியென்றும் உத்திரவீதி என்றும் பெயர். இதில்தான் யானைகட்டும் மண்டபம் உள்ளது. ஸ்ரீராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்து நிர்வாகத்தைக் கவனித்த மடம் இதில்தான் உள்ளது. இது இன்றும் ஸ்ரீரங்கநாராயண ஜீயர்களின் மடம் என்ற பெயரிலேயே வழங்கி தொன்று தொட்டு ஜீயர்கள் பரிபாலனத்திலேயே இருந்து வருகிறது. அஹோபில மடம், மணவாள மாமுனிகள் மடம் போன்றனவும் இதில்தான் உள்ளது. மணவாள மாமுனிகள் தமது அவதார ரகசியத்தை உத்தம நம்பி என்னும் தமது சீடருக்கு இங்குதான் காட்டியருளினார். இம்மடத்தின் தூண்களில் இந்நிகழ்ச்சி செதுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் 5வது திருச்சுற்றுத்துவக்கத்திலே உள்ள வெள்ளைச் சுதைகளால் ஆன வெள்ளைக்கோபுரம் பொலிவுடன் தோன்றும். 5வது திருமதில் ஸு வர் லோகம் என்று அழைக்கப்படும் இந்த 5வது திருச்சுற்றில் நுழையும் நுழைவாசலுக்கு நான்முகன் கோட்டை வாசல் என்று பெயர். இதைச் சோழமன்னன் அகளங்கன் என்பவன் கட்டியதால் அவன் பெயராலேயே அகளங்கன் திருச்சுற்று என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ஆண்டாள் சன்னிதி பேரழகு வாய்ந்ததாகும். பெருமாள் உலா சுற்றி வந்ததும் திருஷ்டி கழித்து கொள்ளும் பழக்கம் உண்டு. அது இச்சுற்றில் உள்ள ஒரு நாலுகால் மண்டபத்தில்தான் நடைபெறுகிறது. திருஷ்டி கழிப்பதென்பது ஒரு சிறிய குடத்தின் மேல் ஒரு சிறு கிண்ணம் வைத்து அதில் கனமான திரியிட்டு ஏற்றிப் பெருமாளுக்கு எதிரில் ஏற்றியிறக்குவதுபோல் சுற்றுவர். இந்நிகழ்ச்சிக்கு திருவுந்திக் |