பக்கம் எண் :

431

     2. இங்கு உள்ள வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும்
வன்னி மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ் தம்பத்தின் முன்பு குவித்து
வைத்து விற்கிறார்கள். இவைகள் அர்ஜு னன் ஆயுதங்களை மறைத்து வைத்த
வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில்
இந்த வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜு னன்
அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது
இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

     3. குருவாயூரில் துலாபாரம் கொடுத்தல் போல் இங்கும்
துலாபாரம்கொடுக்கும் முறை நடைமுறைப் பழக்கத்திலிருந்து வருகிறது இங்கு
துலாபாரமாக வன்னிமரத்துக் காய்களை கொடுப்பது பழக்கமாக உள்ளது.

     4. இங்கு அர்ஜு னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பார்த்தசாரதி சிலை
ஒன்று உள்ளது. இவரது கரம் மூளியாக இருந்ததாகவும், கோவில் வேலை
பார்க்கும் தந்திரி. தங்கத்தால் கை செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

     5. கேரளாவின் புகழ்பெற்ற பம்பா என்றழைக்கப்படும் பம்பை நதி
இத்தலத்தின் வடக்கு வாசலைத் தொட்டுக்கொண்டுதான் செல்கிறது.
பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ள இக்காட்சி இக்கோவிலுக்கு மேலும்
மெருகூட்டுகிறது.

     6. இந்த தலத்தில்தான் புதுத்தைவமான ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின்
ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின் போது ஊர்வலமாக
சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் பஜனைப் பாடல்களுடன்
எடுத்துச் செல்லப்படுகிறது.

     7. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம். இத்தலத்து எம்பெருமானின் திருக்குறளப்பன் என்ற
திருநாமத்தை தலைப்பில் இட்ட பாடலில் நம்மாழ்வார் பாசுரித்துச் செல்கிறார்.

     8. பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற இரண்டு
அரக்கர்கள் பிடுங்கிச் சென்று விட்டனர். பிரம்மன் திருமாலைத் துதித்து
நின்றான். திருமால் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார்.
இதற்கு நன்றி கூறும் முகத்தான் இத்தலத்தில் பிரம்மன் திருமாலைக் குறித்து
தவமிருந்தான் என கூறுவர்.