பக்கம் எண் :

432

74. திருவண்வண்டூர்

     இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்
          விடலில் வேதவொலி முழங்கும் தண்திருவண் வண்டூர்
     கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
          உடலம் நைந்து ஒருத்தி உருகுமென்று உணர்த்துமினே
                             (3230) திருவாய்மொழி 6-1-4

     எந்த நேரமும் இணைபிரியாமல் இன்பக் கடலில் மூழ்கிக் கிடக்கும்
அன்னப்பறவைகளே, இடையறாது வேதங்கள் முழங்கிக் கொண்டிருக்கும்
குளிர்ச்சி பொருந்திய திருவண்வண்டூரில் கடல் நிற வண்ணத்தில் நின்றிருக்கும்
நெடுமாலைக் கண்டு, கூறுங்கள் அன்னங்களாகிய எம்மைப்போலவே
எந்நேரமும் உன்னை விட்டுப் பிரியாமல் இருக்கவேண்டுமென்ற நினைப்பிலே
இங்கே ஒருத்தி உருகிக்கொண்டு இருக்கிறாள் என்பதை அவனுக்குச்
சொல்லுங்கள் என்று தன்னை நாயகியாக பாவித்துக்கொண்டு நம்மாழ்வாரால்
பாடல் பெற்ற இத்தலம் செங்கானூரில் இருந்து வடதிசையில் சுமார் 3 1/2
மைல் தூரத்தில் இருக்கிறது.

     செங்கானூருக்கும், திருவல்லாவுக்கும் இடையில் எரிமேலிக்கரைப்
பாதையில் 2வது கி.மீ. தூரத்தில் உள்ளது.

     திருவமுண்டூர் என்றும் வண்வண்டூர் என்றும் இந்தப் பக்கத்தில்
அழைக்கப்படுகிறது.

வரலாறு.

     ஒரு சமயம் நாரதனுக்கும் பிரம்மனுக்கும் வந்த வாக்கு வாதத்தில்
நாரதனை பிரம்மன் சபித்துவிடவே பிரம்மனைவிட்டுப் பிரிந்த நாரதன்
இவ்விடத்து வந்து திருமாலைக் குறித்துக் கடுந்தவமிருந்து சகல
சிருஷ்டிகளையும் பற்றிய தத்துவத்தை பற்றிய ஞானத்தைத் தமக்கு உபதேசிக்க
வேண்டுமென்று கேட்க, இவன் தவத்தை மெச்சிய திருமாலும்
அவ்விதமேயருளினார்.

     அதனால் திருமாலே பரதத்துவம் என்றும் சகலமும் அவரிடமே
அடக்கமென்றும் அவரைப் பூஜிக்கும் முறை துதிப்பாக்கள் ஆகியன
கொண்டதாக நாலாயிரம் அடிகள் கொண்ட ஒரு நூலை நாரதீய புராணம்
என்ற பெயரில் இவ்விடத்திலே இயற்றியதாக வரலாறு.