பக்கம் எண் :

435

75 திருவனந்தபுரம்

     கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும் - நாளும்
     கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
     விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
     தடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே (3678)
                             திருவாய்மொழி 10-2-1

     என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திருவனந்தபுரம் எழில் நிறைந்த
கேரள மாநிலத்தின் தலைநகரமாகவும் திகழ்கிறது. சனநெருக்கடியும் நாகரீக
வளர்ச்சியும் தென்பட்ட இந்த நாளிலும் இத்தலம் மட்டும் அமைதியின்
அரவணைப்பில் அமிழ்ந்துள்ளது.

     இத்தலத்தைப்பற்றி பிரம்மாண்டபுராணம் பரக்கப் பேசுகிறது. பாகவதம்
ஆங்காங்கே சில குறிப்புகளை இட்டுச் செல்கிறது. அனந்தன் மஹாத்மியம்
என்னும் நூல் இத்தல வரலாற்றைப் பேசுகிறது. கலியுகம் முதல் நாளன்று
இத்தலம் நிறுவப்பட்டதென புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் எல்.ஏ.
ரவிவர்மா கூறுகிறார்.

     இத்தலத்தின் தோற்றம் பற்றி இரண்டுவிதக் கருத்துக்கள் உண்டு.

     1. திவாகர முனி என்பவர் துளுநாட்டுச் சன்னியாசி. துளு என்பது
கேரளாவின் ஒரு பகுதியே. இவர் சீராப்தி நாதனைக் (பாற்கடல் வண்ணனை)
காணவேண்டுமென்று ஆதர்த்த தேசத்தில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார்.
தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு 2 வயது குழந்தையாக இவர்முன்
தோன்றினார். இக்குழவியின் அழகில் பேராவல் கொண்ட திவாகர முனிவர்
தன்னுடனேயே தங்கியிருக்குமாறு அக்குழந்தையை வேண்டினார். அதற்கு
அக்குழந்தை தனக்கு எவ்விதத் துன்பமும் நேராமல் காத்து வந்தால்தான்
உடன் இருப்பதாகவும் தனக்குச் சிறு துன்பம் நேர்ந்தாலும் விலகி விடுவதாகத்
தெரிவிக்கவே குழந்தையின் கட்டளைக்கு முனிவரும் ஒப்புக் கொண்டார்.

     அவ்விதமே அவருடன் வளர்ந்துவரும் ஒரு நாளில் முனிவர் பூஜையில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அங்கிருந்த சாளக்கிராமம் ஒன்றை
அக்குழந்தை எடுத்துக் கடிக்கவே முனிவர் வெகுண்டு கண்டிக்க அக்குழந்தை
ஓட அவரும் பின் தொடர என்னைக்காண வேண்டுமானால் அனந்தன்
காட்டுக்கு வர வேண்டுமெனக் கூறி அக்குழந்தை மறைந்துவிட்டது.