பக்கம் எண் :

436

     முனிவரும் மிகுந்த பக்தி ஏக்கத்தோடு பல இடத்திலும் தேடியலைந்து
இறுதியில் அனந்தன் காட்டில் கடலோரமுள்ள ஒரு இலுப்பை மரப்பொந்தில்
அக்குழந்தையைக் கண்டுவிட்டார்.

     அம்மரம் திடீரென நிலத்தில் வீழ்ந்து அனந்தசயன வடிவமாக இறைவன்
காட்சியளித்தார். அவ்வடிவின் தலை திருவல்லத்திலும் (அனந்தபுரம்
துறைமுகத்திலிருந்து 3 மைல்) பாதம் திருப்பாப்புரத்திலும் (அதற்கெதிர்புறம் 5
மைல்) சரீரம் திருவனந்தபுரத்திலும் அமையக்கண்ட அவர் வியந்து, திகைத்து
பயந்து தமக்கு மிகச்சிறு வடிவாகக் காட்சியளிக்க வேண்டுமென்று கேட்க
அவ்விதமே அம்முனிவர் கையில் வைத்திருந்த யோக தண்டத்தின்
அளவிற்குத் தம்மைச் சுருக்கி காட்சியளித்தார்.

     தமக்கு ஏற்பட்ட பாக்கியத்தை எண்ணி முனிவர் வியந்து நிற்க,
இம்முனிவரின் பால் பற்றுக்கொண்ட எம்பெருமான் தனக்குத் துளுவம்சத்தைச்
சார்ந்த பிராம்மணர்களே நித்ய பூஜை செய்யவேண்டுமென வேண்டியதாகவும்
அவ்விதமே இன்றளவும் நடைபெற்று வருவதாகவும் ஐதீஹம்.

     2. இப்புரத்தைப்பற்றிய மற்றொரு கதை வில்வமங்கலத்திலிருந்த
நம்பூதிரி வகுப்பைச் சார்ந்த சன்னியாசி ஒருவர் அனந்த சயன வடிவிலிருந்த
இப்பெருமானைக் கண்டு மோகித்து வழிபட ஆரம்பித்தார். ஒரு நாள்
நிவேதிக்க (நைவேத்தியத்திற்கு, வழிபாட்டிற்கு) கைவசம் யாதுமில்லாததால்
அருகிலிருந்த மாமரத்தில் சில மாங்காய்களைப் பறித்து ஒரு சிரட்டையில்
(தேங்காய் மூடியில்) வைத்து நைவேத்தியம் செய்தார். இதை நினைவு கூறும்
முகத்தான் இன்றும் தங்கத்தாலான தேங்காய்ச் சிரட்டையில் மாங்காய்
ஊறுகாய் வைத்து நைவேத்யம் செய்யும் முறை இங்கு வழக்கத்தில் உள்ளது.

     இவ்விரண்டு பாரம்பரியங்களையும் இன்றும் பின்பற்றி இக்கோவிலின்
பூஜா உரிமைகள் துளு நாட்டவர்க்கும், நிர்வாகம் நம்பூதிரிகளிடமும் விடப்
பட்டுள்ளது.

மூலவர்

     அநந்த பத்மநாபன். புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்

தாயார்

     ஸ்ரீ ஹரி லட்சுமி

தீர்த்தம்

     மத்ஸ்ய தீர்த்தம், பத்மதீர்த்தம், வராஹ தீர்த்தம்