பக்கம் எண் :

440

     14. இன்னொரு சிறப்பான திருவிழா ஆராட்டு என்பதாகும். இந்த
விழாவில் மகாராஜா, திவான் மற்ற உயரதிகாரிகள் சுவாமியின் குடை மற்றும்
சின்னங்களுடன் ஊர்வலமாக 3 மைல் தொலைவில் உள்ள அரபிக் கடலுக்குள்
சென்று திரும்புவர். சுவாமியை ஊர்வலமாய் எடுத்துச் சென்று பின்பு நீராட்டி
பின் எடுத்து வரும். இவர்கட்கு முன் திருமால் தீய சக்திகளை அழிக்க வில்
அம்புடன் வேட்டைக்குச் செல்வர். மன்னர்கள் சுவாமியுடன் காட்டுக்குப்போய்
வேட்டையாடி பின்னர் கடலில் நீராடித் திரும்புவர்.

     15. இக்கோவிலை கட்டி முடிக்க 40 ஆண்டுகள் ஆயிற்று 4000
கொத்தர்கள், 6000 ஆட்கள், 100 யானைகள், யானைப் பாகர்கள் வேலையில்
ஈடுபட்டனர். 30 மைல் தொலைவிலிருந்து பெரிய தேக்கு மரம் ஒன்று
கொணரப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு துவஜஸ்தம்பமாக நிறுத்தப்
பட்டது. ஆலயத்தின் வெளிப்பிரகாரம் மட்டும் அமைக்க 7 ஆண்டுகள்
ஆயிற்றாம்.

     16. இங்கு ஊட்டுப்பறை என்ற பெயரில் அன்னதானம் செய்யப்பட்டு
வந்தது. அறுசுவை உணவும் அளிக்கப்பட்டது. இப்போது இது வழக்கிலில்லை.

     17. துவஜஸ்தம்பத்தின் அருகில் உள்ள குலசேகரமண்டபத்தில் அழகிய
சிற்பங்கள் பலவுள. யாளி உருவமும் அதன் வாயில் பந்தும் கொண்ட
தோற்றம் தனிச் சிறப்பு கொண்டது ஒவ்வொரு தூணிலும் ஒரு தீபம் ஏந்திய
பெண்மணி (பாவைவிளக்காக) இருப்பதும் பேரழகு வாய்ந்தது. இம்முறையானது
மலையாளத்தின் பிற சன்னதியில் இருப்பினும் இங்குமட்டுமே பேரழகு
பொருந்தியதாய் உள்ளது.

     18. சிலப்பதிகாரம் திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது.
சேரமன்னன் செங்குட்டுவன் வடபுலத்தின் மீது படையெடுத்துச் செல்கின்ற
போது ஆடகமாடமாகிய திருவனந்தபுரத்தில் அறிதுயலமர்ந்த மணிவண்ணன்
அணிந்த மாலையை வாங்கி செங்குட்டுவன் சூடிச்சென்று ‘தொடுத்த
தூவாய்முடி சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்’ என்ற
பெரியாழ்வாரின் வாக்குப்படி சென்றான் என்பதை,