பக்கம் எண் :

442

76. திருவட்டாறு

     வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான்
     கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை
     பாட்டாய பலபாடி பழவினைகள் பற்றறுத்து
     நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே
                      (3723) திருவாய்மொழி 10-6-2

     உண்பதும் உறங்குவதுமான சாதாரண வாழ்க்கை வாழும் நாட்டாரோடு
இருப்பதை ஒழித்து எம்பெருமானின் கீதங்களை பலவாய்ப்பாடி
பழவினைகளின் பற்றறுத்து, கேசவன் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ள
நாராயணன் திருவடிகளை இவ்வாற்றாட்டில் வணங்கி இப்பூவுலகில் பிறக்கும்
பிறப்பையறுப்பேன் என்று நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலம் மலைநாட்டுப்பதிகளிலே மிகத் தொன்மையானது மட்டுமின்றி
மிகப்பிரம்மாண்டமானதும் மிகப் புகழ்பெற்றதுமாகும்.

     கோதா-பரளி நதிகளுக்கிடையே கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம்
தாலுக்காவில் தென்னிந்தியாவின் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்பட்டு
விளங்குகிறது. இத்தலம் மலைநாட்டின் பகுதிகளுள் ஒன்றாகக்
குறிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில்தான் உள்ளது.

     திருவனந்தபுரத்திலிருந்தும், நாகர்கோவிலில் இருந்தும் பேருந்து
வசதிகள் உண்டு. திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில்
தொடுவெட்டி என்ற ஊரில் இறங்கி இங்கிருந்து 6 மைல் தூரம் சென்றும்
இத்தலத்தை அடையலாம்.

     இத்தலத்தைப் பற்றி பிர்ம்மாண்ட புராணம், கருட புராணம்
போன்றவற்றால் அறிய முடிகிறது. அடியேன் இத்தலத்திற்குச் சென்றிருந்த
போது இவ்வூரில் வாழ்ந்த பக்தர் ஒருவர் மலையாள மொழியில் எழுதி
அச்சேறாமல் இருந்த தல வரலாற்றை என்னிடம் கொடுத்து இது உம்மிடம்
சேர்ப்பிக்க தக்கதே என்று ஒப்புவித்தார். அதன் மொழியாக்கமே
இக்கட்டுரையாகும்.

     இத்தலம்பற்றிப் பல நூல்கள் உண்டு. ஆதிதாமஸ்தலம் என்று
இத்தலத்திற்குப் பெயர். மலையாளத்தில் வி.ஆர். பரமேஸ்வரன் பிள்ளை
என்பார் இத்தலம் பற்றி நூலொன்று யாத்துள்ளார்.