பக்கம் எண் :

447

     பெருமாளும் பிராட்டியும் வாழைமரத்திலிருந்து வந்து ஹாதலேய
முனிவரை அழைத்து அஷ்டாச்சர மந்திரம் சொல்லி தமது சிரசருகில் அமர
வைத்தார்.

     7. ஆற்காடு நவாப் (கி.பி.1740) தமது இரண்டு மருமகன்களான சந்தா
சாகிப், படாசாகிப் ஆகியோருக்கு அதிக அளவில் பொன் கொடுக்க நினைத்து
தெட்சிண திருவிதாங்கூரில் உள்ள சுசீந்திரம், கோட்டாறு, வாழ்வச்ச
கோட்டம் திருவட்டாறு போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களில்
கொள்ளையடித்தான். திருவாட்டாற்றில் உள்ள அர்ச்சனா விக்ரகத்தைத் தங்க
விக்ரகம் என நினைத்து பாளையம் கொண்டு சென்று சங்கிலியால் பிணைத்து
வைத்தான். அன்று முதல் நவாபின் அரண்மனையில் பல துர்நிமித்தங்கள்
தோன்ற ஆரம்பித்தன.

     இந்நிலையில் இப்பெருமான் மீது ஆராக்காதல் கொண்ட பக்தன்
ஒருவரின் கனவில் வந்து பெருமாள்தான் இருக்கும் இடத்தை தெரிவிக்க
இவர் பரிவாரத்துடன் சென்று அந்த விக்கிரகத்தை மீட்டு வந்தார். இவர்
வருவதற்குள் திருவட்டாற்றில் இருந்த மக்கள் அதேபோல் விக்ரகத்தை
செய்து சன்னதியில் வைத்து பூஜைகள் ஆரம்பித்துவிட்டனர்.

     நவாபிடமிருந்து கொண்டு வரப்பட்ட விக்கிரகத்தை ஒரு இடத்தில்
வைத்து சுத்தப்படுத்தி நீராட்டி அதை எடுக்க முயற்சிக்கையில் எடுக்க
முடியாமல் போகவே அவ்விடத்திலேயே விட்டுவிட்டனர்.

     பிறகு அந்த இடத்திலேயே அதேபோன்று விக்ரகத்தை செய்து
திருவட்டாறு கொண்டுவர இங்கே ஒரு விக்ரகம் இருப்பதைக் கண்டு
பேராச்சர்யமுற்று கொண்டு வந்த விக்ரகத்தை மாத்தூர் கொண்டு சென்று
வைத்தனர். இந்த விக்ரகத்தைச் செய்தவர் கற்பக மங்கள் தந்திரிகள் என்றும்
கூறப்படுகிறது.

     தாங்க வொண்ணாத் துன்பங்கட்கு ஆட்பட்ட நவாப் தனது தவறுகளை
உணர்ந்து அதற்குப் பிராயச்சித்தமாக திருவட்டாறின் சன்னதியில் உட்புறத்தே
ஒரு மண்டபம் கட்டிகொடுத்தான். அதற்கு அல்லா பூஜை மண்டபம் என்று
பெயர். 388 தோலான் எடையுள்ள தங்கத் தொப்பியும் தங்கத் தகடும்
இப்பெருமானுக்கு நாவாபு கொடுத்தான்.