பக்கம் எண் :

448

     8. கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் (கொல்லம் 855-57) உமயம்ம ராணி
என்பாரின் ஆட்சிக்காலத்தில் முகில்கான் என்னும் பட்டாணி இந்து
ஆலயங்களில் கொள்ளையிட்டான். அவன் மணக்காடு என்னும் ஊரில் தங்கி
இருந்து திருவனந்தபுரம் கோவிலைக் கொள்ளையிட முயன்றான். இதையறிந்த
திருவனந்தபுரம் முஸ்லீம்களே அவனை எதிர்த்து தாக்கி விரட்டினார்கள்.
காடுகளில் ஒளிந்து தப்பித்து முகில்கான் திருவட்டாறு கோவிலைக்
கொள்ளையிட திட்டம் போட்டான். இதையறிந்த ராணி தனது நாட்டின்
மருங்கிருந்த குறுநில மன்னர்களின் உதவியை நாடினாள். இவ்விருவரின்
படைகளும் இணைந்து வருவதற்குள் முகில்கான் சாஹெப் திருவட்டாறு
அருகில் உள்ள ஒரு குன்றுக்கு வந்து சேர்ந்து படைகளை எதிர்க்க பலமான
வ்யூகம் அமைத்திருந்தான். வ்யூகத்தின் தன்மை அறிந்த சிற்றரசுகள் தம்மிடம்
இருக்கும் படைகளைக் கொண்டு இவனை எதிர்ப்பது முடியாத காரியம் என்ற
முடிவுக்கு வந்தனர்.

     அவர்கள் மிகுந்த பயப்பக்தியோடு திருவட்டாறு எம்பெருமானிடம்
சரண்புகுந்து அற்புதமான கீர்த்தனங்கள் இயற்றி பிரார்த்தித்தனர். இந்த
கீர்த்தனங்கள் ஆதிகேஸ்வஸ்தவம் என்று அழைக்கப்பட்டன. இதற்குப் பட
சங்கீர்த்தனம் என்னும் பெயருமுண்டு.

     இவர்களின் பக்தியை மெச்சிய எம்பெருமான் கதண்டு வண்டு
வடிவமெடுத்து எண்ணற்ற கதண்டுகளாக பிரிந்தார். இந்தக் கதண்டுகள்
முகில்கானின் படைகளைக் கொத்திச் சின்னாபின்னப்படுத்தின.

     இந்த வண்டுகளின் வடிவத்தை மலையாள மொழியில் கடந்தல் என்று
குறிப்பர். முகில்கான் கொடுரமான ரண காயங்களுடன் மரணமடைந்தான்.
அவனது வ்யூகம் சிதறியது. எண்ணற்ற படைவீரர்கள் மாண்டனர். முகில்கான்
படையில் இருந்த குதிரைகளை ‘உரளி பஞ்சஸ் திதன்’ என்ற குறுநில மன்னன்
கவர்ந்து சென்றான்.

     முகில்கானை அடக்கம் செய்த கல்லறை இன்று முகில்கான் குன்று
என்று அழைக்கப்படுகிறது. இது மலையாளத்தில் முகில்கான் கரா
எனவழங்கப்பட்டு தற்போது காங்கரா என வழங்குகிறது.