பக்கம் எண் :

455

பாண்டி நாட்டுப் பதிகள் 18

     பாண்டி நாடு என்றாலே அது தமிழ் மணக்கும் காடாகும். பாண்டியா
நின் நாடுடைத்து நல்ல தமிழ் என்பது ஒளவையின் வாக்கு. தமிழ் காத்த
வேந்தர்களுள் பாண்டிய மன்னர்களே தமிழுக்குச் சங்கம் அமைத்த
பெருமைக்கு உரியவர்கள். உலகிலேயே ஒரு மொழிக்கு முதன் முதலாகச்
சங்கம் அமைத்திட்ட பெருமை உண்டென்றால் அது பாண்டிய
நாட்டிற்குத்தான். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என
முச்சங்கங்களைக் கொண்டு தமிழ் வளர்த்து, தமிழ் காத்த நிலமாகும் பாண்டிய
நாடு.

     இத்தகைய பெருமை பெற்றதனால்தான் என்னவோ நாலாயிரத்திவ்ய
பிரபந்தமும் இந்த பாண்டிய மண்ணில்தான் கிடைத்தது. ஆம், நாத
முனிகளுக்கு நாலாயிரத் திவ்ய பிரபந்தம் கிடைத்தது, பாண்டிநாட்டின்
திருக்குரு கூரான ஆழ்வார் திருநகரியில்தான். இது மட்டுமன்று இந்நாட்டின்
பெருமை 12 ஆழ்வார்களில் 4 ஆழ்வார்களைத் தன்னகத்தே
கொண்டிருந்ததும் பாண்டி நாடுதான். ஆழ்வார்களில் பெரியவரான
பெரியாழ்வார், பிராட்டியின் அம்சமாக அவதரித்த ஆண்டாள் தேவி,
வேதத்தை தமிழில் விரித்துரைத்த நம்மாழ்வார், அவரின் அடிபோற்றி உய்ந்த
மதுரகவியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்கள் அவதரித்ததும் இந்த பாண்டி
நாட்டில்தான்.
 

     பாண்டி நாடு என்றால்
     வடிவேல் எறிந்த வான்பகை பொறாஅது
     பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
     குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”

     என்று சிலம்பு காட்டும் பாண்டிய நாடு தற்போதுள்ள குமரியிலிருந்து
ஆஸ்திரேலியாக் கண்டம் வரை பரவியிருந்த லெமூரியாக்கண்டம் என்று
ஆராய்ச்சியாளர் கூறுவர். அந்த மாபெரும் நிலப்பரப்பில் தற்போதைய
வைகை நதி போன்று பன்மடங்கு நீண்டதாயிருந்த, பஃறுளியாறு என்னும்
நதியும் அடுக்கடுக்கான பல மலைகளும், குமரி எல்லையும் கடல்வாய்ப்பட்டு
அழிந்தது என்று சங்க நூல்கள் செய்தி கூறுகின்றன.

     கடல் கோளால் அழிந்து பட்டது போக மீதி இருந்த பாண்டி
நாட்டெல்லைகளை பின் வருமாறு பெருங்கதை கூறுகிறது.