பக்கம் எண் :

456

     வெள்ளாறது வடக்கா மேற்குப் பெருவழியாம்
     தெள்ளார் புனர்கன்னி தெற்காகும் - உள்ளார்
     ஆண்டகடல் கிழக்கா யைம்பத்தாறு காதம்
     பாண்டிநாட் டெல்லை பகர்
                            பெருங்கதை 2098

     பாண்டி நாட்டின் வட எல்லை வெள்ளாறு. தெள்ளாறு எனப்படும்
தெள்ளாற்றின் பெரும் வழியே மேற்கு எல்லையாகும். புனர் கன்னி யென்பது
குமரிமுனை ஆகும். புனர் கன்னி யெனப் பெயர் வந்தமைக்கு கிரேக்க
வரலாற்றாசிரியன் பெரிப்ளசு கூறும் கீழ்க்காணும் காரணம் மிகவும்
பொருத்தமானதாகும்.

     வைக்கரைக்கு (வைகை) அப்பால் கருஞ்சிவப்பு மலை, பரளி
கரையோரமாக தெற்கே செல்கின்றது. அந்நதியின் முதலிடம் பலிதா எனப்
பெயர் பெறும். அவ்விடத்தில் நல்ல துறையும் கடற்கரையோரமாக ஊரும்
உள்ளது. இதற்கு அப்பால் குமரி என்றோர் இடம் இருக்கிறது. தமது
இறுதிக்காலத்தைக் கழிக்க விரும்புகின்றவர்களும் நீராட விரும்புகின்றவர்களும்,
பிரம்மச்சரிய நெறியில் ஒழுகுவோரும் இங்குவந்து கூடுகின்றனர். பெண்களும்
அவ்வாறே செய்கின்றனர். இதற்கு காரணம் இங்கு ஒரு பெண் தெய்வம்
வாழ்ந்து நீராடினதாகக் கூறப்படுகிறது.

     இந்தக் குமரியைத்தான் புனர்கன்னி என்று தெற்கெல்லையாகக்
கூறப்பட்டுள்ளது.

     பாண்டி நாட்டின் கிழக்கு எல்லையாக 56 காத தூரத்தில் அமைந்துள்ள
கடல் (கடற்கரை) குறிக்கப்படுகிறது.

     ஆனால் தற்போது பாண்டிநாடு என்றால் அது பழைய மதுரை
இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களின் நிலப்பரப்புதான். இந்த
பாண்டிய நாட்டின் தொன்மைப் பெருமையை எண்ணி வியப்படையாமல்
இருக்க முடியவில்லை. இந்நாட்டின் பெருமைக்கேற்ப இங்குள்ள திவ்ய
தேசங்களும் மிகப் பெருமை பெற்றவைகளாகும். ஆம், பாண்டி நாட்டுத்
திவ்யதேசங்கள் எல்லாம் மிகவும் பிரம்மாண்டமானவை. மற்ற நாட்டு திவ்ய
தேசங்களில் சில பெரிதாகவும், சில சிறியதாகவும் அமைந்துள்ளன. ஆனால்
பாண்டி நாட்டுத் திவ்யதேசங்கள் ஒன்றிரண்டைத் தவிர பிற எல்லாமே
பிரம்மாண்ட மானவைகள்தாம். அளவில் மட்டுமின்றி பெருமையிலும் புகழிலும்
இத்தலங்கள் பிரம்மாண்ட மானவைகள்தாம்.

     ஆம் திருப்புல்லாணியை எடுத்துக்கொண்டால் உலகம் போற்றும்
இராமபிரானைப் பெற்ற தசரதன் புத்திரப்பேறு வேண்டி யாகம் செய்தது
இங்குதான்.