பக்கம் எண் :

457

     அஷ்ட திக்கஜங்களின் தலைமைப் பீடமாகத் திகழ்வது பாண்டி நாட்டுத்
திவ்யதேசமான வானமாமலைதான்.

     தந்தையும், மகளுமாகப் பெரியாழ்வாரும், ஆண்டாளும் அவதரித்தது
ஸ்ரீவில்லிப்புத்தூரிலேதான்.

     பத்தரிகாச்சரமத்தில் ஸ்ரீமந் நாராயணனால் தானே சிஷ்யனுமாய் தானே
ஆச்சார்யனுமாய் நின்று வெளியிடப்பட்ட திருமந்திரம் அன்று முதல் ஓரான்
வழியாக உபதேசிக்கப்பட்டு ஒருவரிடமிருந்து ஒருவராக அறியப்பட்டு வந்தது.
அத்தகைய திருமந்திரம் எளிய முறையில் இப்புவியின் மாந்தரெல்லாம்
உரைத்து உய்ய வெளியிடப்பட்டது. பாண்டி நாட்டுப் பதியான
திருக்கோட்டியூரில்தான்.

     ஸ்ரீரங்கநாதனைவிட பெரிய பெருமாளாக சயன திருக்கோலத்தில்
எம்பெருமான் பள்ளிகொண்டுள்ள திருமெய்யத்தை தன்னகத்தே கொண்டு
திகழ்வதும் பாண்டிநாடுதான்.

     தமிழ்நாட்டில் முதன்மையானதுமாய், இந்தியாவில் மிக முக்கியமானதாயும்
விளங்கும் திருவிழாக்களில் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில்
எழுந்தருளும் கள்ளழகரின் மாலிருஞ்சோலையும் பாண்டியநாட்டுத் திவ்ய
தேசம்தான்.

     எல்லா ஸ்தலங்களிலும் எம்பெருமானுக்கு பல்லாண்டு இசைக்கும்
பல்லாண்டு பாசுரம் விளைந்ததும் இந்த நாட்டின் திவ்ய தேசமே ஆம்.
பெரியாழ்வார் பரதத்வ நிர்ணயம் செய்து பாண்டிய மன்னனின்
பொற்கிழியறுத்ததும் எம்பெருமான் கருட வாகனத்தில் பிராட்டியுடன்
பெரியாழ்வாருக்கு காட்சி கொடுக்க பல்லாண்டு பல்லாண்டு என
மங்களாசாசனம் துவங்கப்பட்டதும் திருக்கூடல் எனப்படும் கடல் நகர் திவ்ய
தேசமே.

     சித்திர கோபுரம் எனப்படுவதும், மோட்சம் தரும் தெற்கு வீடாகத்
திகழ்வதும், வைகுண்ட ஏகாதசியைப் போன்று கைசிக ஏகாதசியால்
புகழ்பெற்றதும், திருமங்கையாழ்வார் பரமபதம் சென்றதும் மலையாள
திவ்யதேச யாத்திரை சென்ற ஸ்ரீஇராமனுஜரை எம்பெருமான் கொண்டு
வந்துவிட்டுச் சென்ற புகழ் பெற்றதுமான திருக்குறுங்குடியும் பாண்டி நாட்டுத்
திவ்யதேசமாகும்.

     பாண்டி நாட்டுத் திவ்யதேசங்களின் பெருமையை இன்னும் எவ்வளவோ
எடுத்துச் சொல்லலாம்.

     இத்தகைய புகழோடு பொலிந்து நிற்கும் பாண்டி நாட்டுத் திவ்யதேசங்கள்
எவையென பின்வரும் பாடல் விளக்குகிறது.