| திருக்கரத்தால் இராமானுஜருக்கு திருமண் காப்பிட்டு விட்டு திருமன் பெட்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு இராமானுஜரின் பின்னேவர, எம்பெருமானை சேவித்தற் பொருட்டு திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் உள்ளே நுழைய துவஜஸ்தம்பத்தில் திருமண் பெட்டியை வைத்துவிட்டு இராமானுஜரை கடந்து சென்ற வடுகநம்பி கோவிலுக்குள் சென்றதும் மறைந்துவிட்டார். வடுகநம்பி வராதபடியால் எம்பெருமானே இவ்விதம் செய்தாரோ என்றெண்ணி இப்பெருமானுக்கு வடுகநம்பி என்ற பெயரிட்டு அழைத்தார் இராமானுஜர். இதன்பின் திருவனந்தபுரம் செல்லும் வழியில் இராமானுஜரைத் தேடியலைந்து வருந்திய வடுகநம்பியின் கனவில் தோன்றிய எம்பிரான் இராமானுஜர் திருக்குறுங்குடியில் உள்ளாரென்றுரைக்க சிலநாள் கழித்து வடுகநம்பி திருக்குறுங்குடி வந்தடைந்தார். 7. வராகமூர்த்தியின் மடியிலிருந்த பூமிப்பிராட்டி அவரால் உரைக்கப்பட்ட கைசிக மகத்துவத்தைக் கேட்டுத் தாமும் பூலோகம் சென்று இறைவனின் பெருமையைப் பரப்ப வேண்டுமென்று நினத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதாரம் செய்தார். எனவே ஆண்டாள் அவதாரத்திற்கு வித்திட்ட விளை நிலம் இதுதான். 8. இந்தக் கைசிக புராணத்தை ஸ்ரீ பராசரபட்டர் என்பவர் ஸ்ரீரங்கத்தில் தெளிவாக வாசிக்க கேட்ட அரங்கன் பட்டரே உமக்கு மேலைவீடு தந்தோம் என்று கூறி பட்டரை ஏற்றுக்கொண்டார். இன்றும் இக் கைசிக புராணம், குறுங்குடி, அரங்கம், ஆழ்வார் திருகரி, திருவாலி திருநகரி, போன்ற திவ்ய தேசங்களில் வாசிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி எல்லா ஸ்தலங்களிலும் கொண்டாடுதல் போல் கைசிக ஏகாதசியும் எல்லாச் சேத்திரங்களிலும் கொண்டாடப்படுகிறது. இம்மகத்துவம் பிற திவ்யதேசங்களுக்குண்டான திருவிழாக்களுக்கு இல்லை. 9. இத்தலத்தில் சிவபெருமானுக்கும் சன்னதி உள்ளது. திருமங்கையாழ்வார் “அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்று சிவன் இவரோடு இருக்கும் இருப்பை உணர்த்துகிறார். இப்பொழுதும் திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் பக்கம் நின்றார்க்கு குறையேதும் உண்டோ என்று கேட்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. |