பக்கம் எண் :

47

23. வரலாற்றுப்பின்னணியில் திருவரங்கம்

     i) இப்பெருமாள் திரேதாயுகத்துப் பெருமாள்

     ii) தர்மவர்மா, கிள்ளிவளவன் ஆகியோரின் காலம் சரிவர
அறியமுடியவில்லை.

     iii) கி.பி. 10ம் நூற்றாண்டு - இது சோழர்கள் தமிழ்நாட்டின்
ஆட்சியுரிமையில் சிறந்திருந்த காலம்.

     கி.பி. 953 முதலாம் பராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டுக்
கல்வெட்டு, இம்மன்னன் இக்கோவிலுக்கு ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு
அளித்ததையும் அதற்கு கற்பூரம், பட்டுத்திரி, நூல், வாங்குவது உட்பட அதன்
நிலையான செலவினங்கட்கு 51 பொற்காசுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது.
ஏறத்தாழ 400 சோழர் கல்வெட்டுகள் உண்டு.

     கி.பி. 1060-1063 இராச மகேந்திர சோழன் இங்குள்ள முதலாம்
பிரகாரத்தின் திருமதிலை கட்டினான். எனவே அது இராசமகேந்திரன் திருவீதி
என்றே வழங்கப்பட்டுள்ளது.

    கி.பி.1020-1137 இது இராமானுஜரின் காலமாகும். இவரின் அரிய
சேவைகளை கோயிலொழுகு என்னும் நூல் சிறப்பித்துப் பேசுகிறது.

     கி.பி. 1120-1170 முதலாம் குலோத்துங்க சோழன். இவன் இராமா
னுஜருக்குப் பல கொடுமைகள் விளைவித்தான். இதனால் ராமானுஜர் சிலகாலம்
(சுமார் 13 ஆண்டுகள்) ஒய்சாளப் பேரரசின் மைசூர்பகுதியில் தங்கியிருந்தார்.

     கி.பி.1178-1218 மூன்றாம் குலோத்துங்க சோழன். இவன் காலத்தில்
இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப்
பட்டது. இவன் சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்தான்.

     கி.பி.1223-1225 திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து
கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.