பக்கம் எண் :

48

     கி.பி.1216-1238  மாறவர்மன் சுந்தரபாண்டியன் கர்நாடகத்தைக்
கைப்பற்றினான். கங்கர்களை விரட்டினான். கோவில் நிர்வாகம் சீர்பெற்றது.

     கி.பி.1234-1262 ஒய்சாள மன்னன் சோமேசுவரன் இங்கு நந்தவனம்
உண்டாக்கி மூன்றாம் பிரகாரத்தில் யாகசாலை நிறுவினான்.

     கி.பி.1251-1268 மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சடாவர்ம சுந்தர
பாண்டியன் ஏராளமான பொன்வழங்கி, மூன்று விமானங்கள் கட்டினான்.
திருமடைப்பள்ளி கட்டினான். இராண்டாம் பிரகாரத்தில் பொன் வேய்ந்தான்.
பொற்கருட வாகனம் வழங்கினான். இவன் கடக அரசை (கட்டாக், ஒரிசா)
போரில் வென்று கைப்பற்றிய பொன்னில் திருவரங்கனுக்கு மரகதமாலை,
பொற்கிரீடம், முத்தாரம், முத்துவிதானம், பொற் பட்டாடை போன்றன
வழங்கினான். இவன் காவிரி நதியில் தெப்ப உற்சவத்தின் போது இரண்டு
படகுகள் கட்டினான். அதில் ஒன்றில் தனது பட்டத்து யானையை இறக்கித் தானும் அதன்மீது ஏறி அமர்ந்து கொண்டான். மற்றொரு படகில் ஏராளமான
அணிகலன்களையும், பொற் காசுகள் நிரம்பிய குடங்களையும், கோவிலுக்கு
வேண்டிய பிற முக்கிய பொருட்களையும் நிரப்பி தன்னுடைய படகில் நீர்
மட்டத்தின் வரையில் இன்னொரு படகின் நீர்மட்டம் வரும் வரை தானம்
வழங்கினான். அப்பொருட்களை இத்திருக் கோவிலுக்கு வழங்கினான்.

     கி.பி.1263-1297 ஒய்சாள மன்னன் இராமதேவன் இக்கோவிலுக்கு
எண்ணற்ற தானம் வழங்கி புனருத்தாரப் பணிகளை மேற்கொண்டார்.
இத்திருக்கோவிலில் உள்ள பேரழகு பொருந்திய வேணு கோபால
கிருஷ்ணரின் சன்னிதி இவர் காலத்தில் ஏற்பட்டதாகும்.