2. பூமிப்பிராட்டி தனது அழுக்கைப் போக்குதல் திருமால் பிரம்மனைப் படைத்தான். பிரம்மனுக்கு சிருஷ்டித் தொழில் அமைந்ததால் கர்வம் ஏற்பட்டது. அதை அடக்க திருமால் தனது செவியிலிருந்து அழுக்கை எடுத்து உருட்டிப்போட அது மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்களாய் உருவெடுத்து, திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து செல்லும் தாமரைத் தண்டினை ஆட்டி பிரம்மனை அச்சுறுத்தினர். தனக்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த பிரம்மன் தன்னைக் காக்குமாறு திருமாலிடமே தஞ்சம் புகுந்தார். அவ்விரண்டு அசுரர்களும் திருமாலையும் எதிர்க்கத் துணியவே இருவரையும் பிடித்து தமது தொடையில் அடித்து முறித்து பூமியில் வீசினார். அவர்களின் மேனியிலிருந்து ரத்தமும் நிணமும் கலந்து பூமியெங்கும் துர்நாற்றம் வீசவே நிலைகுலைந்த பூமித்தாய், திருமாலைத் தஞ்சமடைந்து துதித்து நின்றார். திருமால் தமது சக்ரத்தை ஏவி அமிர்த மழைபெய்வித்து அசுத்தத்தைப் போக்கினார். தனது அழுக்குநிலை போக வேண்டுமென இத்தலத்தில்தான் பூமித்தாய் திருமாலை துதித்து நின்றார். 3. ஊர்வசியும் திலோத்துமையும் மோட்சம் பெறல் தேவலோகத்தில் அழகிலும் ஆடல் பாடல்களிலும் சிறந்த ஊர்வசி, திலோத்தமை இருவரும் பிரம்மனிடம் சென்று தமக்கு எப்போதும் அழிவில்லாததும், பிறப்பற்றதுமான ஒரே மாதிரி நிலை வேண்டுமெனக் கேட்க மகாவிஷ்ணு ஒருவரால் மட்டுமே பிறப்பற்ற மோட்சநிலை தரமுடியுமென்றும் அதற்கு பூலோகத்தில் உள்ள தோத்தாத்திரியில் சென்று விஷ்ணுவை குறித்து தவம் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார். உடனே இரண்டு அழகிகளும் இத்தலத்திற்கு வந்து இங்கிருந்த வைகனச முனிவரிடம் (அஷ்டாச்சர) எட்டெழுத்து மந்திரத்தை எப்படி உச்சரிப்பதென்று பயிற்சி பெற்று பல்லாண்டுகள் தவமிருந்து இறுதியில் திருமால் காட்சி கொடுத்து (சாயுஜ்யம்) தமது பக்கத்திலேயே இருக்கும் பேரளித்தார். எனவேதான் இத்தலத்தில் தேவமாதர்களான ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீச, ஸ்ரீதேவியும் இருமருங்கும் அமர்ந்திருக்க மாமேருபோல் எம்பெருமான் எழுந்தருளி யுள்ளார். |