4. ஆதிசேடனும், கருடனும் தவமியற்றல் கிரேதா யுகத்தில் காசியப் பிரஜாபதி என்பவருக்கு கத்ரு, வினதை என்ற இரண்டு மனைவியர் இருந்தனர். இவ்விருவரும் நெடுங்காலம் புத்திரப் பேறு இல்லாதிருக்க தவவலிமையில் மிகச்சிறந்த முனிவராய் விளங்கிய தமது தந்தையிடம் சென்று வரம் கேட்டு நின்றனர். அதற்கவர் கத்ரு நீ பல புதல்வரைப் பெறுவாய், வினதை நீ இரு மக்களை பெறுவாய் உங்களிருவரின் குழந்தைகள் இரண்டு பேர் விஷ்ணுவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெறுவர் என்று சொல்ல கத்ரு எண்ணற்ற நாகங்களைப் பெற்றெடுக்க அவர்கட்குத் தலைவனான ஆதிசேடன் எம்பெருமான் துயில்கின்ற அனந்தனாகவானான். வினதை இரு புதல்வரை ஈன்றாள், ஒருவன் அருணன், மற்றொருவன் கருடன் இதில் அருணன் சூரியனுக்கு தேரோட்டியாகப் போனான் கருடன் ஹரிக்கு வாகனமானான். ஒரு சமயம் கருடன் பாதாள லோகத்திற்கு தனது சகோதரர்களாகிய நாகங்களைக் கண்டுவரலாமென்று சென்றான். அப்போது நாகங்கள் கருடனை இகழ்ந்து பேச கருடன் நாகங்களை நையப் புடைத்தான் அப்போது அங்கு வந்த ஆதிசேடன் நானும் நீயும் ஒரே இடத்தில் சேவகம் செய்கிறோம், என்று சமாதானம் செய்ய கருடன் சமாதானமுற்று பாற்கடலுக்குச் சென்றான். அங்கிருந்த முனிவர்களிடம் அனந்தன் (ஆதிசேடன்) சர்வகாலமும் மகாவிஷ்ணுவிற்கு பணிவிடை செய்து அவனருகிலேயே உள்ளான். எனக்கும் அதுபோல பாக்கியம் வேண்டுமெனவும் அதற்கு நான் என்ன செய்யவேண்டுமெனவும் வேண்டி நின்றான். அதற்கவர்கள் தோத்தாத்திரி சென்று எம்பெருமானைக் குறித்து தவமிருக்கச் சொல்ல அவ்விதமே கருடன் கடுந்தவமியற்றினான். இதையறிந்த திருமால் உடனே தோத்தாத்திரிக்கு எழுந்தருளி கருடா நீ முன்பே எனக்கு வாகனமாகும் பேறு பெற்றாய் இதற்குமேல் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அனந்தனைப் போல பிரியாநிலை வேண்டுமென்றான். கருடனைப் போற்றிய திருமால் அவ்வாறாயின் நீயும் வைகுந்தம் வந்து எனது வாசலின் முன்னே எந்தநேரமும் புறப்படத் தயாராகும் கோலத்தில் நிற்பாயாக என்றருளினார். |