6. சோரநாதன் என்று பெயர்கொண்ட இப்பெருமானின் மீது வடமொழியில் இயற்றப்பட்டுள்ள “ஸ்ரீசோரநாத சுப்ரபாதம்” மிகவும் பிரசித்திபெற்றதாகும். 7. காலதூஷகனுக்கு அருள் பாலித்து ஸ்ரீவைகுண்ட நாதனாக எழுந்தருளியிருந்த பெருமானும், அச்சிறு சன்னதியும் வெகு காலத்திற்குப்பின் பூமியில் புதையுண்டு போனது. ஒரு சமயம் பாண்டிய மன்னர்கள் நெல்லையில் தமது அரசாட்சியை செலுத்துங்கால் மணப்படை, கொற்கை போன்றன, பாண்டியர்களின் முக்கிய பிரதேசமாக விளங்கின. அவ்வமயம் பாண்டியனின் பசுக்களை மேய்ப்பவன் சந்நிதி மூடிய இவ்விடத்திற்குப் பசுக்களை ஓட்டி வந்ததும் ஒரு பசுமட்டும் தனித்துச் சென்று வைகுண்ட பெருமாள் பூமியில் மறைந்துள்ள இடத்தில் பால் சொரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இதைக்கண்ட பசுமேய்ப்பவன் இதனை மன்னனுக்குத் தெரிவிக்க மன்னன் தன் பரிவாரங்களுடன் சூழ இவ்விடம் வந்து தோண்டிப் பார்க்கையில், அங்கே வைகுண்டப் பெருமான் சன்னதியிருப்பதைக்கண்டு மிகவும் ஆனந்தித்து தற்போதுள்ள கோவிலை அமைத்தான் என்பர். 8. இங்குள்ள கள்ளப்பிரானின் திருமேனியை உருவாக்கிய சிற்பி அப்பேரழகில் பெரிதும் மயங்கி தன் உள்ளத்தைப் பறிகொடுத்து ஆசைமிக்குப் போனதால் செல்லமாகக் கன்னத்தில் கிள்ளி விட்டார். ஆத்மார்த்தமான பக்தியில் கிள்ளிய வடுவை எம்பெருமான் கன்னத்தில் ஏற்றுக் கொண்டார். இன்றும் இப்பெருமானின் கன்னத்தில் கிள்ளப்பட்ட வடுவைக்காணலாம். 9. இந்த இறைவனைத் “திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளப்பிரான்” என்று கல்வெட்டு கூறுகிறது. 10. இத்தலத்து எம்பெருமானை ஆண்டுக்கு இருமுறை சூரியதேவன் வந்து வழிபாடு செய்கிறான். அதாவது சித்திரை 6ம்தேதி, ஐப்பசி 6ந்தேதி. இவ்விரு தினங்களிலும் இளஞ்சூரியனது பொற்கிரணங்கள் கோபுர வாயில் வழியாக வைகுந்த நாதனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறது. இத்தகைய அமைப்பில் இக்கோவிலின் கோபுர வாசல் அமைக்கப்பட்டது, எண்ணியெண்ணி வியக்கத் தக்கதாகும். சூரிய வழிபாடு 108 திருத்தலங்களில் இங்கு மட்டுமே உள்ளது. |