பக்கம் எண் :

483

82. திருப்புளிங்குடி

     கொடுவினைப் படைகள் வல்லையாய்
          அமரர்க்கு இடர்கெட அசுரர்கட்கு இடர் செய்
     கடுவினை நஞ்சே என்னுடையமுதே
          கலிவயல் திருப்புளிங்குடியாய்
     வடிவினை இல்லா மலர்மகள் மற்றை
          நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
     கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள்
          கூவுதல் வருதல் செய்யாயே
                         (3577) திருவாய்மொழி 9.2.10

     “நிலமகளும் மலர்மகளும் வருடும் நின் மெல்லடியை இந்தக்
கொடியவினை செய்த பாவியேனும் பிடிக்க வேண்டுமென்று கூவுகிறேன்.
அந்தோ நீ வராதிருக்கின்றாயே” என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட
இத்திருத்தலம் வரகுண மங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல்
தொலைவில் உள்ளது.

வரலாறு.

     இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தாலும், தாமிரபரணி ஸ்தல
புராணத்தாலும் அறிய முடிகிறது.

     ஒருசமயம் மஹாவிஷ்ணு இலக்குமி தேவியுடன் வைகுண்டத்திலிருந்து
புறப்பட்டு இப்பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் அழகழகாக
வரிசைக்கிரமமாக மணல்மேடு அமைந்துள்ள பகுதியில் சற்றே உல்லாசத்துடன்
தனித்திருக்க, இப்பூவுலகில் வந்ததும் தன்னை விட்டுவிட்டு இலக்குமி
தேவியுடன் இவர் மகிழ்வெய்தியுள்ளாரே என்று எண்ணி பொறாமை கொண்ட
பூமிப்பிராட்டி மிகவும் சினங்கொண்டு பாதாள லோகம் புக்கு மறைய உலகம்
வறண்டு இருளடைய தேவர்கள் எல்லாம் இந்நிலை மாறவேண்டுமென ஸ்ரீமந்
நாராயணனைத் துதிக்க அவரும் பாதாள லோகம் சென்று பூமிப்பிராட்டியைச்
சமாதானப்படுத்தி இருவரும் தமக்குச் சமமே என உபதேசம் செய்து
இருவருக்கும் நட்பு உண்டாக்கி, அவ்விரண்டு தேவிமார்களும் சூழ
இவ்விடத்தில் காட்சி தந்தார். பூமியைக் (பூமிப் பிராட்டியைக்) காத்ததாலும்
பூமிபாலர் என்னும் திருநாமம் இப்பெருமானுக்கு உண்டாயிற்று. காசினி
வேந்தர் என்ற சொல்லே நம்மாழ்வாரின் பிற பாக்களில் காய்சின வேந்தர்
என்று பயின்று வருகிறது.