இத்தலத்தில் நடைபெற்ற இன்னொரு புனித வரலாற்றையும் புராணம் பேசுகிறது. யக்ஞசர்மா என்னும் அந்தணன் தனது பத்தினியுடன் இன்பம் நுகர்ந்துகொண்டிருக்கையில், வசிட்டரின் மகனான சக்தியென்பவர் தமது ரிஷிகள் புடைசூழ வந்தவிடத்து அவர்களை மதியாதிருந்ததோடு, தட்சிணையுங்கொடுக்காது அவர்களை தீச் சொற்களால் நிந்தனையும் செய்வித்தான். அக்கணமே அம் முனிவர்கள் அனைவரும் யக்ஞசர்மாவை ஓர் அரக்கனாகும்படி சபிக்க, தன் நிலை மாறிய அவ்வந்தணன், அம் முனிவர்களின் பாதத்தில் வீழ்ந்து சாப விமோசனமும் வேண்டி நின்றான். அதற்கு முனிவர்கள் இத்திருத்தலத்தில் பின்னொரு காலத்தில் இந்திரன் யாகம் செய்வான். அப்போது அந்த யாகத்தை அழிக்க நீ எத்தனிக்கும் போது திருமாலின் கதையால் அடிபட்டு சாபவிமோசனம் பெறுவாய் என்றனர். இஃதிவ்வாறிருக்க, இமயமலையில் உள்ள ஒரு தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது தேவியுடன் இனிதே குலாவிக் கொண்டிருக்கும்போது அத்தடாகத்துக்கு அருகில் மானுருக் கொண்டு ஒரு ரிஷியும் அவர் மனைவியும் விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்திரன் தனது வஜ்ராயுதத் தால் மான் உருவில் உள்ள ரிஷியை அடித்து வீழ்த்த இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தது. அதைத் தீர்ப்பதற்கு கண்ட விடமெங்கும் பைத்தியன்போல் இந்திரன் அலைந்தான். இதைக்கண்டு மிகவும் மனம் நொந்த தேவர்கள் தமது குலகுருவான வியாழபகவானைச் சரணடைந்து ஆலோசனை கேட்க, அவர், இந்திரனைத் திருப்புளிங்குடிக்கு அழைத்து வந்து பயப்பக்தியுடன் பூமிபாலரை வணங்கி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடச் செய்ததும் பிரம்மஹத்தி தோஷம் இந்திரனைவிட்டு நீங்கியது. இந்த தீர்த்தத்துக்கும் இந்திர தீர்த்தம் என்ற பெயர் நிலைத்தது. தனது சாபவிமோசனத்தால் மிகவும் மகிழ்ந்த இந்திரன். திருமாலுக்கு நன்றி செலுத்தும் முகத்தான் இங்கு மிகப் பெரிய யாகம் துவங்கினான். அப்போது அரக்கனுருவில் உள்ள யக்ஞசர்மா திருமாலைக் குறித்து உள்ளுருகி வேண்டி கடுந்தவம் புரிந்து கண்ணீர் சிந்தி நின்றான். அப்போது யாக குண்டலியில் தோன்றிய ஸ்ரீமந் நாராயணன் தனது கதையினால் அவ்வரக்கனை அடித்து வீழ்த்த அவன் சாப விமோசனம் பெற்றான். |