பக்கம் எண் :

492

கின்றானோ அவனது சகல பாவங்களையும் நான் போக்குகிறேன், என்று
திருவாய் மலர்ந்தருளினார்.

     இஃதிவ்வாறிருக்க, முனிவர்கள் நடத்தக்கூடிய யாகத்தின் அவிர்ப்பாகம்
(யாகத்தின் முடிவில் திரண்டுவரும் பலன்) தேவர்களுக்கு மட்டுமே கிடைத்து
வந்தது.

     அப்போது அசுவினி தேவர்கள் என்னும் இருவர் பிரம்மனிடம் சென்று
யாகவேதியில் கிடைக்கும் அவிர்ப்பாகத்தில் தமக்கும் பங்கு வேண்டுமென்று
கேட்டனர்.

     பூமியில் வைத்தியர்கள் தர்மம் பிறழாமல் வைத்தியம் செய்து
வருங்காலத்தில் அத்தர்மத்தின் பலன் அசுவினி தேவர்களிரு வருக்கும்
கிடைத்து வந்ததாம். பூவுலகில் வைத்தியர்கள் தர்மத்தினின்றும் பிறழ்ந்ததால்
வைத்ய தர்மப்பலன் கிடைக்காததால் அவர்கள் சென்று பிரம்மனிடம்
முறையிட்டனர். (தேவலோகத்தில் அஸ்வினி தேவர்களிருவரும்
வைத்தியத்திற்கு தலையாயவர்கள் என்பது புராணக்கருத்து)

     பிரம்மன் அவ்விருவரையும் நோக்கி, தங்களுக்கு அவிர்ப்பாகம்
கிடைக்க வேண்டுமெனில் பூவுலகில் தாமிர பரணியின் வடகரையில் உள்ள
அரவிந்த லோசனப் பெருமாளை தாமரைப் பூக்களால் அர்ச்சித்து கடுந்தவம்
மேற்கொள்ளுங்கள் என்று கூற அவ்விருவரும் அவ்விதமே ஆயிரம்
வருடங்கள் கடுந்தவம் மேற்கொண்டனர்.

     இவர்களின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் தாமரைப்
புஷ்பங்களைக் கையில் ஏந்திய திருக்கோலத்தோடு காட்சி தந்து
அவ்விருவருக்கும் அவிர்ப்பாகம் பெறுவதற்கான சக்தியினையும் வரத்தினையும்
அளித்தார்.

     அசுவினி தேவர்கள் நீராடினமையால் அங்குள்ள பொய்கை நீர்
அஸ்வினி தீர்த்தமாயிற்று.

மூலவர்

     ஸ்ரீஅரவிந்த லோசனன் (செந்தாமரைக் கண்ணன்)

தாயார்

     கருந்தடங்கண்ணி நாச்சியார்

விமானம்

     குமுத விமானம்

தீர்த்தம்

     அஸ்வினி தீர்த்தம்