| மனைவியான ஆத்மவிதி என்பாளும் உடைய நங்கை என்ற பெயரில் பிறந்து இருவரும் புத்திரப்பேறு வேண்டி குருகூர்வந்து விரதம் இருக்கப் போகிறார்கள். அவர்களின் புத்திரனாக நான் அவதரிக்க போவதன் காரணம், துவாபரயுகத்தில் கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவரும், தேவகியும் தமக்குப் பிள்ளையாகப் பிறந்த என்னை நோக்கிமோட்சம் வேண்டுமென்று கேட்க அது கலியுகத்தில் சித்திக்கும் என்று நான் ஏற்கனவே வரம் கொடுத்துள்ளேன். அவர்களே தற்போது புத்திரப்பேறுவேண்டி நிற்பர். அவர்கட்குப் புத்திரனாக அவதரித்ததும் நான் மிக உகந்த ஆதிநாதன் திருத்தலத்தில் என்னை வந்துவிட்டவுடன் நான் தவழ்ந்துவந்து நினது மடிமேல் ஏறி 16 ஆண்டுகள் யோக நிஷ்டையில் அமர்ந்து அதன்பின் வேதம் தமிழ்செய்து நாத்திகமழித்து ஆத்திகம் வளர வழிகாட்டுவோம் என்று சொல்லி தனது விரலில் இருந்த கணையாழியைக் கழற்றிக் கொடுத்து இது எந்த இடத்தில் உனது கையை விட்டு நழுவுகிறதோ அந்த இடத்தில் புளியமரமாக நில் என்று ஆசீர்வதித்து அனுப்பினார். ஆதிசேடனான இலக்குமணனே இங்கு புளியமரமாக எழுந்தருளியிருப்பதால் இதற்கு சேஷ ஷேத்திரம் என்றும் பெயர். வராஹ ஷேத்திரம் வராஹ அவதாரத்தை காண விரும்பிய சில முனிவர்கள் இத்தலத்தில் வந்து கடுந்தவம் புரியவே அவர்கட்கு வராஹ நாராயணன் மடியில் பூமிப்பிராட்டியுடன் காட்சிகொடுத்த திருத்தலமாதலால் வராஹ ஷேத்திரம் என்ற பெயர் பெற்றது. தீர்த்த ஷேத்திரம் சங்கன் முக்தி பெற்றதாலும், பெரும் ஞானிகளும் தபசிகளும் இந்த பொருநல்லாற்றில் அவதரித்ததாலும் முக்தியளிக்கும் ஸ்தலங்கள் இவ்வாற்றின் கரை மருங்கு அமைந்திருப்பதாலும் இதற்கு தீர்த்த ஷேத்திரம் என்று பெயர். இவ்விதம் ஆதியில் தோன்றியதால் “ஆதிஷேத்திரம்” என்றும், வராஹ ரூபத்தை காட்டியருளியதால் “வராஹ ஷேத்திரம் என்றும் ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடன் உறங்காப் புளியாக அவதரித்தமையால் சேஷ சேஷத்திரமெனவும், தாமிரபரணியாலும், சங்கணித்துறையாலும் வளம்கெழுமிய ஊராகையால் “தீர்த்த சேஷத்திரம்” எனவும், தாந்தன் என்னும் கீழ்குலத்தானுக்கு மோட்சம் நல்கியதால் தாந்த ஷேத்திரம் எனவும், இந்த குருகூரை “பஞ்சமஹா ஷேத்திரம்” என்றும் பெரியோர் போற்றிப் புகழ்வார். |