| தீங்கு யாதும் நேர்ந்திடலாகாதே, கண்ணேறு பட்டுவிடலாகாதே என்று நினைந்து பல்லாண்டு, பாடினார். இதன்பின் மீண்டும் வில்லிபுத்தூரையடைந்து விட்டு சித்தர் தொடர்ந்து எம்பெருமானின் கைங்கர்யத்திலீடுபட்டு நந்தவனம் அமைத்து மலர் பறித்து எம்பெருமானுக்கு பாமாலையோடு பூமாலையும் படைத்துக்கொண்டிருந்தார். இஃதிவ்வாறிருக்க எம்பெருமானிடம் பிராட்டி, பூலோகம் சென்று இறைவனுக்கு கைங்கர்யம் செய்ய எண்ணியிருப்பதையுணர்த்த எம்பெருமானும் சம்மதிக்க விஷ்ணு சித்தர் நந்தவனக் கைங்கர்யத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே வேளையில் அங்கிருந்த திருத்தூழாய்ச் செடியடியில் ஆடிப் பூரத்தில் அன்றலர்ந்த மலராய் அவதரித்திருக்க சற்றே இவ்விந்தையைக் கண்ட அவர் வந்திருப்பது திருமகளேயென உணர்ந்து தம்பத்தினியான விரஜையிடம் கொடுத்து கோதை என்றே பெயர்சூட்டி வளர்க்க, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஆண்டாள் வளர்ந்து பருவம் எய்தினாள். விட்டுசித்தன் என்னும் பெயர் கொண்ட பெரியாழ்வார் தினந்தோறும் இறைவனுக்குச் சூட்டிவைக்கும் பூமாலையை ஆண்டாள் தானே எடுத்து தனது குழலிற்சூடி அதன்பின் பெருமாளுக்குச் சூட்டலானாள். இவ்வாறு தினந்தோறும் நடந்து வருவதை ஒரு நாள் கண்டுவிட்ட பெரியாழ்வார் கோதையை மிகவும் கடிந்துகொண்டு எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கர்யத்தில் இப்படியொரு பழுது நேர்ந்ததே என்றெண்ணி மிகவும் வருத்தமுற்று அயர்ந்து தூங்குகையில் கனவில் வந்த எம்பெருமான் ஆண்டாள் சூடிக்களைந்த கண்ணியே தமக்கு மிகவும் உகப்பு என்று சொல்ல இதைக்கேட்ட விட்டு சித்தர் மிகவும் வியந்து போனார். பின் ஆண்டாளுக்குத் திருமணம் முடிக்க பேச்சு எடுக்குங்காலை தான் “மானிடர்க்கு வாக்குப்படேன் அரங்கனுக்கே ஆட்படுவேன்” என்று கூறி தனது தோழிகளை அழைத்துக் கொண்டு (கிருஷ்ணவதாரத்தில் மோஹித்து) கிருஷ்ணாவதாரத்தில் கோபிகாஸ்திரிகள் கோபாலனை எவ்விதஞ்சென்று துதித்தினரோ அதே போன்று ஸ்ரீவில்லி புத்தூரை கோகுலமாகவும். அங்கே எழுந்தருளியிருந்த வடபெருங்கோயிலுடையானை கண்ணனாகவும், தனது தோழிகளை கோபிகாஸ்திரீகளாகவும் கற்பனை செய்துகொண்டு தினமும் கோயிற் சென்று பாடல் புனைந்து பாமாலை சூட்ட, இவளின் எண்ணம் ஈடேறுமோ என்று பெரியாழ்வார் வியந்திருந்த ஒரு காலையில் அவர் கனவில் தோன்றிய எம்பெருமான், “நின் திருமகளோடு அரங்கம் வாரீர் யாமாட் கொள்வோம்” என்று |