| 16. பெரியாழ்வார் தமது திருமாளிகையில் வைத்து வழிபட்ட லெட்சுமி நாராயணர் இங்கு தனிக்கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. 17. பெரியாழ்வார் கட்டிவைத்த மலர் மாலையைத்தான் அணிந்துகொண்டு இதை இவ்வாறே எம்பெருமானுக்கே அணிவித்தால் அழகாய் இருக்குமா என்று ஆண்டாள் தனது ஒப்பனையை சரிபார்த்த கண்ணாடிக் கிணறு என்று பெயர் பெற்ற சிறு கிணறு ஆண்டாள் சன்னதிக்கு அருகாமையில் இன்றும் உள்ளது. இந்தக் கிணற்றில்தான் ஆண்டாள் தனது அழகு பார்ப்பாளாம். 18. பெரியாழ்வாரின் வம்சத்தார் இன்றும் இவ்வூரில் வாழ்கின்றனர். கோவிலுக்கு வெகு அருகாமையிலேயே வாசம் செய்கின்றனர். பெரியாழ்வாருக்கு வாரிசு இல்லை. அவரது சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தோர், “வேதப்பிரான் பட்டர்” என்ற திருநாமத்துடன் பெரியாழ்வாரின் வம்சத்துக் குரியவர்களாக இன்றும் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்கள். 19. உற்சவகாலங்களில் ஆண்டாளுக்கும் ரெங்க மன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டு செய்யும் போது கட்டியம் கூறும் உரிமை இவர்களுக்குண்டு. 20. மார்கழி பகற்பத்து முதல் நாளன்று ஆண்டாள் ரங்க மன்னார் துணையுடன் சன்னதித் தெருவில் எழுந்தருளும்போது பெரியாழ்வாரின் வம்சத்தில் வந்த வேதப்பிரான் பட்டர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். தங்கள் வீட்டு வாசலில் அவர்களை நிறுத்தி பிறந்தவீட்டு உபசாரங்களையும் செய்கிறார்கள். வாசலிலும் திண்ணையிலும் காய்கறிகளையும், கனிவர்க்கங்களையும் நிரப்பி பாலும் பருப்பும் (இவ்விதம் காய்கறிப் பரப்பி வைத்து பெண்வீட்டுச் சீதனமாக வழங்குவதை “பச்சை பரத்தி என்றும் பொரிகடலையுடன் சர்க்கரைப்பால் கலந்து கொடுப்பதை” மணிப்பருப்பு” என்றும் வழங்குவர்) நிவேதனம் செய்து தம் குடும்பத்து பெண்ணான ஆண்டாளையும், மாப்பிள்ளை அரங்கனையும் அன்போடு உபசரிக்கிறார்கள். |