பக்கம் எண் :

528

89. திருத்தங்கல்

     பொங்கார் மெல்லிளங்கொங்கை பொன்னே பூப்பப்
          பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று
     செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும்
          சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே
     தண்காலும் தண்குடந்தை நகரும்பாடித்
          தண்கோவலூர் பாடியாடக் கேட்டு
     நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மை? என்ன
          நறை யூரும் பாடுவாள், நவில்கின்றாளே
                    (2068) - திருநெடுந்தாண்டகம் 17.

     ஒரு செங்கால் நாரையானது தன் காதலியின் குரலைக் கேட்பதற்கு
உடலுருகிச் சிந்தித்து இருப்பது போன்று என் பெண்ணான இவள்
எம்பெருமானே உன்மீது மையல் கொண்டு உன்னோடு வார்த்தையாடுவதற்காக,
கண்களில் நீர் ததும்ப தன் இளங்கொங்கை பொன்னால் செய்யப்பட்ட
பூவினைப் போல மெலிந்துபோக நின்று கொண்டு குடந்தையெம்
பெருமாளையும், கோவலூரானையும், திருத்தண்காலூரானையும்
நறையூரானையும் பாடியாடி அவன் திருநாமங்களை நவின்றுகொண்டே
இருக்கிறாளே என்று ஒரு தாயின் மனோபாவத்தில் தன் குழந்தை
படும்பாட்டைத் தெரிவித்து, அப்பெண்ணையும் நோக்கி, ஏ, நங்கையே நம்
குடிக்கு இது அழகோ, இம்மயக்கிலிருந்து நீ விடுபடமாட்டோயோ, என்று
திருமங்கையாழ்வாரால் புகழாரஞ் சூட்டப்பட்ட இத்திருத்தங்கல் இன்றைய
காமராஜர் மாவட்டத்தில் சிவகாசியிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில்
சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. இன்றைய வளர்ச்சியின் நிலையில்
சிவகாசியும் திருத்தங்கலும் ஒரே ஊராகவே காட்சியளிக்கிறது.

வரலாறு

     பிரம்மாண்ட புராணத்தின் சேத்திர காண்டத்தில் 8வது அத்தியாயத்தில்
இத்தலம் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒருவனான
புதபகவானின் மைந்தன் புரூரவ சக்ரவர்த்தியால் இப்பாரத தேசம் ஒரு
காலத்தில் நான்குவகையான நீதி நெறிகளுடன் ஆளப்பட்டது. அவன்
பேரறிஞனாகவும் (கல்விக்கு அதிபதியான புதனின் மைந்தனல்லவா) மிக்க
வல்லமை பொருந்தியவனாகவும் இருந்தான். தன் அந்திமக் காலத்தின்
ஆரம்பத்தருவாயில் தனது நாட்டினைக் குழந்தைகளிடம்