பக்கம் எண் :

530

     முன்னொருகாலத்தில் சுவேதத்தீவு என்னும் வெள்ளையந் தீவில் ஒரு
புனித ஆலமரத்திற்கும், ஆதிசேடனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்ற
விவாதம் வளர, இவ்விவாதந் தீர்க்க பிரம்மனிடம் செல்ல, ஆதிசேடனே
சிறந்தவன் அவன் மீதுதான் பெருமாள் எப்போதும் பள்ளிகொண்டுள்ளார்.
ஆலிலையின் மீது எப்போதோ ஒரேயொரு சமயத்தில்தான் பள்ளி
கொள்கிறாரென்று சொல்ல மிகவும் சினந்த ஆலமரம் விஷ்ணுவை நோக்கி
தவமிருக்க, விஷ்ணு தோன்றி நின் ஆசையாதென வினவ, என் மீதும்
எப்போதும் பள்ளிகொள்ள வேண்டுமென்று சொல்ல, அங்ஙனமாயின் தென்
தமிழ்நாட்டில் ஸ்ரீ தவமிருக்கும் திருத்தங்கலில் நீ மலைவடிவில் சென்று
அமர்வாயாக, ஸ்ரீயை ஏற்க வரும் காலத்தில் யாம் உன் மேல் (உன்
விருப்பப்படியே) நின்றுங் கிடந்தும் இருந்தும் அருள்பாலிக்கிறோம் என்று
அருளினார். மலை வடிவங்கொண்டு இங்கு தங்கிய ஆலமரத்திற்கு
தங்கும்+ஆல+மலை-தங்காலமலை எனும் பெயருண்டாயிற்றென்பர்.

     இதனைப் பிரளய காலத்தில் திருமால் தங்கிய ஆலிலையின்
அம்சமாகவே ஆன்றோர் கருதுவர்.

     இம்மலையின் மீது ஸ்ரீயை ஏற்றுக்கொள்ள திருமால் விரைந்த போது
மற்ற இரண்டு பிராட்டிமார்களும் அவர் கருத்தையொப்பி இவ்விடத்தே
எழுந்தருளி சேவை தந்தனர்.

மூலவர்

     நின்ற நாராயணன். கிழக்கே திருமுக மண்டலம்.

உற்சவர்

     திருத்தண்காலப்பன். நின்ற திருக்கோலம்

தாயார்

     செங்கமலத்தாயார். அன்னநாயகி (ஸ்ரீதேவி) அனந்தநாயகி (நீளாதேவி)
அம்ருதநாயகி (பூமாதேவி) என்ற திருப்பெயர்களும் உண்டு.

தீர்த்தம்

     பாபவிநாச தீர்த்தம், பாஸ்கர சங்க, பத்ம அர்ஜூன என வேறு 4
தீர்த்தங்களுமுண்டு.

விமானம்

     தேவசந்ர விமானம்