காட்சி கண்டவர்கள் சல்ய பாண்டியன், ஸ்ரீ வல்லபன், சந்திர கேது (புலி) ஸ்ரீதேவி. சிறப்புக்கள் 1. அர்ஜு னா நதி ஒரு காலத்தில் இந்நகரில் ஓடிய தாய் ஐதீகம். அந்நதிக் கரையிலமைந்திருந்த ஸ்தலம் அழிந்துவிடவே இப்போதுள்ளவாறு அமைக்கப்பட்டதென ஒரு கருத்து நிலவுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இங்குள்ள மூலவர், உற்சவர், திருமேனிகள்யாவும் வர்ணம் பூசப்பட்ட சுதையால் ஆனவை. எனவே இங்கு பெருமாளுக்குத் திருமஞ்சனம் கிடையாது. அர்ஜூனா நதியை ஆய்வு செய்தபோது கிடைக்கப்பெற்ற செப்பேடுகள் இவ்வூரைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன. இவை சுமார் 6000 ஆண்டுகட்கும் முந்தியவை. பண்டை காலத்து பாண்டி நாட்டரசர்கள் இத்திருத்தலத்தோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை சல்ய பாண்டியனுக்கு இறைவன் இங்கு காட்சிகொடுத்த வரலாற்றால் உணரலாம். பல பாண்டிய மன்னர்களால் கைங்கர்யம் செய்யப்பட்ட தலமாகும் இது. பாண்டி நாட்டு மன்னர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு இவ்வூரைப் பற்றியும், இத்தலத்தைப் பற்றியும் கிடைக்கும் தகவல்கள் ஒரு விடி விளக்காகவும், வழிகாட்டியாகவும் அமையும். 2. திருத்தங்காலப்பன் என்றும் அருண கமலா மகா தேவி என்றும் அழகான தமிழ்ப் பெயர் கொண்டவர்கள் இப்பெருமானும் பிராட்டியும். 3. சிலப்பதிகாரத்தில் வரும் “வார்த்திகன் கதை” இவ்வூரில் நிகழ்ந்ததாகும். எனவே சிலம்பும் இதைப் பற்றிப் பேசுகின்றது. 4. மைசூரின் நரசிம்மர் ஆலயத்தில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்புகள் உள்ளது. 5. பண்டைக் காலத்து பாண்டி நாட்டு வரலாற்றை ஆராயுங்கால் இது “கருநீலக்குடி ராஜ்யத்து திருத்தங்கல்’ என்றே சொல்லப்படுகிறது. |