பக்கம் எண் :

536

விமானம்

     அட்டாங்க விமானம் (எண்கோண விமானம்)

காட்சி கண்டவர்கள்

     பெரியாழ்வார், வல்லபர், பிருகு.

சிறப்புக்கள்

     1. திருமால் “திரிவிக்ரம” அவதாரம் எடுக்கும் போது வளர்ந்த அவரது
ஒரு பாதம் சத்திய லோகம் வரை செல்ல, பிரம்மன் அக்கமல பாதங்களை
தனது கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் அலம்ப அதனின்றும் தெரித்த
நீர்த்துளிகள் இவ்வையத்தில் வீழ்ந்து புனிதமாக்கியது. அதுவே இவ்வையத்தில்
(வைகை) ஆனது. இவ்வையை இருகூறு ஆகப் பிரிந்து மதுரை நகருக்கு
மாலை போல் ஆயிற்று. ஒரு பிரிவு வையை எனவும் மறு பிரிவு கிருதமால்
எனவும் பெயர் பெற்றது. கிருதமாலா நதியின் கரையில் இப்பெருமாள்
எழுந்தருளினார். இங்கு விழுந்ததைப் போலவே திருமாலிருஞ்சோலையில்
விழுந்த ஒரு நீர்த்துளிதான் சிலம்பாறு ஆயிற்று. வையை இருபெரும் பிரிவாய்
பிரிந்து ஓடியமைக்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் ஏராளம்.

     2. முன்னொரு யுகத்தில் சத்திய விரதன் என்னும் பாண்டியன் கூடல்
அழகர்பால் மிக்க அன்புகொண்டு திருவாராதன தீர்த்தம் மட்டும் பருகி கடும்
விரதம் மேற்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் அந்தி வேளையில் ஜல
தர்ப்பணம் செய்கையில் அவன் அஞ்சலி செய்யும் நீரில் மீனுருவமாக
(மச்சாவதாரமாய்) வந்த திருமால் அவனுக்கு அருமறைப் பொருளை
உபதேசித்தார், என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. எனவேதான் பாண்டிய
மன்னர்கள் திருமாலிடம் பெரும் பக்தி பூண்டது மட்டுமன்றி தமது
கொடிகளிலும் மீன் உருவத்தையே தங்கள் சின்னமாய் பொறிக்கலாயினர்.

     3. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
கூடலழகருக்குப் பல திருவிழாக்கள் எடுத்து மகிழ்ந்தான். ஆவணித்
திருவோண நன்னாளில் சிறப்பான பல வழிபாடுகள் செய்தான். அதனை
“மாயோன் மேய ஓண நன்னாள்” என்று தமது மதுரைக் காஞ்சியில் மாங்குடி
மருதனார் கூறுகிறார்.