4. துவரைக் கோமான் என்ற பெயரில் கூடழலகரே சங்கப்புலவராக வீற்றிருந்தார் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். கூடல் அழகர் என்ற இச்சொல்லைத்தான் “வ்யூக சுந்தரராஜன்” என்று வடநூலார் மொழியாக்கஞ் செய்து கொண்டனர். 5. சங்க காலத்தில் இப்பெருமானுக்கு “இருந்த வளமுடையார்’ என்ற திருநாமம் இருந்தது. கூடழலகர் இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளிய ஸ்தல மென்பதால் சிலப்பதிகார அரும்பதவுரைகாரரும் இருந்த வளமுடையார் என்றே இப்பெருமானுக்கு பெயர் சூட்டியுள்ளார். பரிபாடலில், “வானார் எழிலி மழைவளம் நந்தத் தேனார் சிமய மலையின் இழி தந்து நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய இருந்தையூர் அமர்ந்த செல்வாநின் திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே” | என்ற அடிகளில் இருந்தையூர் அமர்ந்த செல்வா என்று இப்பெருமான் போற்றப்படுகிறார். இத்தலமிருந்த பகுதி இருந்தையூர் என சங்க காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்தையூர் கருங்கோழி மோசி என்னும் தமிழ்ப் புலவர் இருந்தமையை நக்கீரனின் இறையனார் களவியல் உரை பேசிப் போகிறது. 6. திருமங்கையாழ்வாராலும், திருமழிசையாழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். பெரியாழ்வார் இம்மதுரையில் பல்லாண்டு பாடியதால் திருப்பல்லாண்டால் இப்பெருமானையும் மங்களாசாசனம் செய்தாரென்பர். 7. மணவாள மாமுனிகள் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார். 8. கி.பி. 1307இல் திருவாய் மொழிப் பிள்ளை என்ற ஆசிரியர் மதுரைக்கு அருகே உள்ள குந்தி நகரத்தில் (கொந்தகை) அவதரித்தார். இவர் பாண்டி நாட்டின் முதலமைச்சராய் இருந்தவர். முஸ்லீம்களின் படையெடுப்பின் போது இத்தலத்திற்கு எவ்வித ஊரும் நேராவண்ணம் பாதுகாத்துவந்தவர். இவரது சீடரே மணவாள மாமுனிகளாவர். |