பக்கம் எண் :

538

     9. இராமானுஜரால் இத்தலம் பெரிதும் உவப்பாக பேசப்பட்டுள்ளது.
பல்லாண்டு பாடப்பட்ட ஸ்தலமாதலால் இதனை பரமபதத்திற்கு ஈடாக அவர்
கருதினார்.

     10. பாண்டிநாட்டுத் தலங்களில் பெருமாள் மாடி வீட்டில்
குடிகொண்டுள்ளார் என்று கூறுவதற்கொப்ப இத்தலம் 3 அடுக்குகளாலானது.
முதல் அடுக்கில் (தளத்தில்) வீற்றிருந்த திருக்கோலத்தில் வீயூக சுந்தரராசன்
என்ற பெயரில் அமர்ந்துள்ளார். 2வது அடுக்கில் சூரிய நாராயணன் என்ற
பெயரில் நின்ற திருக்கோலத்தில் காட்சியருளுகிறார். நவக்கிரகங்களும் இந்தக்
கோவிலின் உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இதன் மற்றோர்
சிறப்பம்சமாகும்.

     11. ஒரு சமயம் பூமியெங்கும் பெருமழை பொழிய மழை நிற்பதற்கான
அறிகுறிகள் யாதும் தென்படாத நிலையில் பக்தர்கள் மழை நிற்க
வேண்டுமென்று இப்பெருமானைப் பிரார்த்திக்க, பக்தர்கள் வேண்டுகோளை
ஏற்ற பகவான் நான்கு மேகங்களை ஏவ, அவை மாடங்கள் போல் ஒன்று கூடி
மழையைத் தடுத்தமையால் இந்நகருக்கு “நான் மாடக்கூடல்” என்று
பெயருண்டாயிற்று என்பர்.

     12. வைகானஸ ஆகமம் என்ற ஆராதனைக் கிரம முறைக்கு உட்பட்டது
இத்தலம்

     13. சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இயங்கும் அஷ்டாங்க
விமானங்கொண்ட இத்தலம் மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்டு
(அஷ்ட அங்கம்) மிக்க எழிலுடன் தோன்றுகிறது. அஷ்டாங்க விமானத்தின்
நிழல் தரையில் விழுவதில்லை. இவ்விமானத்தை 45 நாட்கள் தொடர்ந்து
தினமும் பதினொருமுறை சுற்றினால் எண்ணியகாரியம் கைகூடும் என்பது
இங்கு அனுபவ உண்மையாகும்.

     14. கூடலழகரை வேண்டிப் பேறு பெற்றவர்களை
 

     வில்லாண்ட வடவரையான் மணம் புணர
          அட்டாங்க விமான மென்னும்
     இல்லாண்டு புயன் கனகன் காசிபனார்
          பிருகு அம்பரீடன் கூடல்
     தொல்லாண்ட புருரவசு மலயகேதனன்
          முதலலோர் தொழப் புத்தூரான்
     பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட
          தோளனடி பணிதல் செய்வாம்.
     என்ற பாடலால் தெரியலாம்