பக்கம் எண் :

540

     வைணவத்தை ஸ்தாபிக்கும் மஹான்கள் அவதரிக்கப்போகிறார்கள் என்று
சொன்னாற்போல் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரும், கிருதமாலாவில்
பெரியாழ்வாரும் பிரேவேசித்தார்கள்.

     21. ஒரு வகையில் ஸ்ரீ ரங்கத்தைப் போல இத்திருத்தலம் இரண்டு
நதிகளுக்கு இடைப்பட்டதாகும். அரங்கம் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும்
இடைப்பட்டது. கூடல் வையைக்கும் கிருதமாலாவிற்கும் இடைப்பட்டது.

     22. ஆகமங்களில் கூறியுள்ள முறை வழுவாத அர்ச்சாரூபியே இங்கு
எழுந்தருளியிருப்பதால் இத்தலம் ஆர்ஷிதம் என்ற வகைக்குட்பட்டதாகும்.

     23. இக்கோவிலின் உட்புறம் சுவர்களில் 108 திவ்ய தேசத்து
எம்பெருமான்கள் அந்தந்த ஸ்தலங்களில் எவ்வித ரூபமாய்
எழுந்தருளியுள்ளரோ அந்த மாதிரியே வர்ண ஓவியங்களால்
தீட்டப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

     24. இங்கு இருக்கும் ஆண்டாள் திருச்சன்னதி மிகவும் சக்தி
வாய்ந்ததாகும். தம் தகப்பனாரால் பல்லாண்டு பாடப்பெற்ற தலமாதலால்
தனது தனிப்பெருமானை மகள் நிலைநாட்டிக் கொள்வதில் தடை என்ன
இருக்க முடியும்.

     25. இந்த மதுரையில் ஒரு காலத்தில் வைணவம் தழைத்தோங்கி
இருந்தது. இங்கு கருடாழ்வாருக்கும் பலராமனுக்கும் கோவில்கள் இருந்ததைச்
சிலப்பதிகாரம் செப்புகிறது.
 

     “உவனச் சேவல் உயர்த்தோன் நியமமும்
          மேழிவலவன் உயர்த்த வெள்ளை நகரமும்”

     மதுரைமாநகரில் உவணச் சேவல் கருடக் கொடியினை உடைய
திருமாலின் கோவிலும், மேழிவலவன் - பலராமனின் கோவிலுமிருந்த
வெள்ளை நகரம் - அதாவது வெண்மை நிறமான மேகங்கள் (நான்மாடக்கூடல்
போன்று) எந்நேரமும் சூழ்ந்திருப்பதால் வெள்ளை நகரம் எனவும்
சிறப்பிக்கப்படுகிறது.