பக்கம் எண் :

543

கமண்டல நீரால் பாத கமலங்கட்கு அபிஷேகம் செய்ய அந்த கமண்டல நீர்
பெருமாளின் காலிலுள்ள பொன்சிலம்பில் பட்டுத் தெறித்து இவ்விடத்தே
சிலம்பாறாகப் பெருகி இது எங்கே உற்பத்தியாகிறது என்று
சொல்லமுடியாதவாறு வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டு தேனைவிட
இனிமையாக இனிக்கும் தன்மை பெற்று எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கு
இலக்காகி நிற்கிறது.

     இந்தச் சிலம்பாறுதான் நூபுர கங்கையாகும். இந்த தீர்த்தம் தவிர்த்து
வேறு தீர்த்தங்களில் இங்குள்ள உற்சவருக்கு திருமஞ்சனம் செய்தால்
பெருமாள் கறுத்துவிடுவதால் இரண்டு மைல் தொலைவில் உள்ள இந்த
தீர்த்தமே எப்போதும் திருமஞ்சனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

     எம்பெருமானின் திருமேனிக்கு தீர்த்தமாகி வயல்வெளிகளில் நெளியும்
இந்த நூபுர கங்கையின் மகத்துவம் எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.
இதில் நீராடி விஷ்ணு சாமீப்யம் பெற்றவர் பலருண்டு. இந்த நதி இகபர
சுகத்தைத் தருவதால் இந்த நதிக்கு “இஷ்டசித்தி” என்ற ஒரு பெயரும்
உண்டு. பகவானுடைய பாதார விந்தங்களிலிருந்து தோன்றி ஸம்ஸார
பந்தத்தினால் உண்டான அழுக்கைப் போக்கடிக்கும் இந்நதிக்குப் “புண்யச்ருதி’.
என்றும், சகல ஜனங்களின் ஜனன மரண துக்கத்தைப் போக்கடிப்பதால்
“பவஹாரி” என்றும் பல பெயர் உண்டு.

மூலவர்

     ஸ்ரீபரமஸ்வாமி, பஞ்சாயுதங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி சூழ பிரயோகச்
சக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     சுந்தரவல்லி, ஸ்ரீதேவி என்ற பெயரும் உண்டு.

உற்சவர்

     சுந்தரராஜன், கள்ளழகர் என்னும் திருநாமம். இங்கு உற்சவர் மிகவும்.
பேரழகு வாய்ந்தவர். இந்த உற்சவர் அபரஞ்சியால் செய்யப்பட்டவர்.
இந்தியாவிலேயே இங்கும் திருவனந்தபுரத்திலும் மட்டுமே அபரஞ்சியால்
செய்யப்பட்ட உற்சவர்கள் உள்ளனர். சோலைமலைக்கரசர் என்றே திவ்ய
பிரபந்தம் இந்த உற்சவமூர்த்தியை வர்ணிக்கிறது. புராணம். “ரிஷபாதிஷர்”
என்று அழைக்கிறது. மூலவரை விட உற்சவர் பெரும் புகழ் பெற்ற
ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கு உற்சவரும் பஞ்சாயுதங்களுடன்
திகழ்கிறார்.