புராணத்தில் “முக்திதரு பேரழகு திருமலை” என்று போற்றப்படுகிறது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்னும் அழகிய மணவாளதாசர் இந்த அழகரைப்பற்றி அழகர் அந்தாதி பாடியுள்ளார். சுமார் 300 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கவிகாலருந்திரர் என்னும் புலவர் ஒருதனிப் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். வேம்பத்தூரைச் சேர்ந்த கவிகுஞ்சரம் அய்யர் என்பவர் அழகர் கலம்பகம் என்னும் நூலை இயற்றியுள்ளார். 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல பட்டடை சொக்க நாதப் புலவர் “அழகர் கிள்ளை விடு தூது என்னும் இலக்கிய மணி மாலையை அழகருக்குச் சமர்ப்பித்துள்ளார். “கவிக் குஞ்ச பாரதி” சோலைமலைக் குறவஞ்சி என்னும் நூலில் மலையழகையும், அங்குள்ள கோவில்களையும், இயற்கை காட்சிகளையும் வர்ணிக்கிறார். மற்றும் திவ்ய சூரி சரிதம், ஸ்ரீகம்ச சந்தேகம், போன்ற நூல்களும் இத்தலம் பற்றிப் பேசுகின்றன. கோவில் ஒழுகு என்னும் நூலும் இத்தலம் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கின்றது. 7. சந்திர வம்சத்தில் உதித்த புருரவசு என்னும் மன்னன் தென்தேசத்தில் மணலூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவனுக்கு நான்கு புத்திரர்கள். மூத்தவனான இந்திரத்யுமனன் இத்தலத்தில் மகா விஷ்ணுவைக் குறித்து தவமிருந்து பராக்கிரமசாலியான ஒரு புத்திரனை பெற்றெடுத்தான். அவனுக்கு மலயத்வஜன் என்று பெயரிட்டான். இந்த மலயத்வஜ பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வரும் போது தனது புஷ்ப விமானத்தில் இம்மலை மீது பறந்துவர விமானம் பறக்க முடியாது தரையிறங்கியது. அங்கிருந்த முனிவர்கள் மூலம் இப்பெருமானின் கோபுரத்தை தாண்டி எந்த விமானமும் பறக்க முடியாதென்ற உண்மையைக் கேள்விப்பட்டு, இப்பெருமான் பக்கலில் ஈடற்ற பக்தி கொண்டு இக்கோவிலுக்கு எண்ணற்ற கைங்கரியங்களை செய்து மிகச்சிறந்த வைணவ மன்னனாகத் திகழ்ந்தான். 8. திருவரங்கமும், திருமாலிருஞ் சோலையும், அநேக விஷயங்களில் ஒன்று படுகின்றன. இரண்டு கோவில்களும் கோட்டைகளும், உயர்ந்த மதிற்சுவர்களும் வாய்க்கப் பெற்றவை. நெல் மணிகளைச் சேர்த்து வைக்கும் குதிர்கள் இரண்டு தலங்களிலுமுண்டு, இரண்டு கோவில்களிலும் உள்ள பிரதான வாயில்கள் “ஆர்யன் வாசல்” என்றும் |