ஆர்ய படர் வாசல் என்றும் அழைக்கப்படுகின்றன. இரண்டு ஸ்தலங்களிலும் பிரசாதங்கள் தயாரிப்பதும், விளக்கிடுவதும். தனி நெய்யிலேயே நடைபெறுகின்றன. திருவிழாக்களின் நடைமுறையும் இரண்டு கோவில்களில் ஒத்துக் காணப்படுகின்றன. திருவரங்கத்தின் மதில்களை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார் திருமாலிருஞ் சோலை மதில்களை பெரியாழ்வார் பாடியுள்ளார். திருவரங்கன் இராமாணுஜருக்கு அருள் பாலித்தான். மாலிருஞ் சோலையான் கூரத்தாழ்வானுக்கு அருள் பாலித்தான். இருவரும் அழகில் விஞ்சியவர்கள். திருவரங்கன் சயன திருக்கோலத்தில் தனது பேரழகைக் காட்டினான். இவன் நின்ற திருக்கோலத்திலும், அமர்ந்த திருக்கோலத்திலும் காட்டினான். பெரியாழ்வாருடன் ஆண்டாளும் இப்பெருமானைக் குறித்துப் பாசுரம் பாடி இறுதியில் இவ்வழகரையே ஆண்டாள் திருமணம் செய்து கொண்டாள். அதாவது ஸ்ரீரெங்கநாதன் அழகராகவே வந்து ஆண்டாளை ஏற்றுக் கொண்டதாக ஐதீகம். இதிலும் இவ்விரண்டு ஸ்தலங்களும் ஒன்று படுகின்றன. அமர்ந்த திருக் கோலத்தில் ஆண்டாள் இருப்பது இங்கு மட்டும்தான். 9. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பாக “இடைக்காடர்” என்பவரால் இந்த அழகர் மலையில் மருத்துவ மன்றம் ஏற்படுத்தப்பட்டு சித்த வைத்திய சாஸ்திரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. இங்குள்ள மரங்கள், உயர்ந்த மூலிகைகள், பற்றி சித்த வைத்திய நூல்கள் அரிய குறிப்புக்களைத் தருகிறது. 10. இங்குள்ள அர்த்த மண்டபத்தில் கல்லால் செய்யப்பட்ட மிக நுணுக்கம் வாய்ந்த இரண்டு ஜன்னல்கள் காண்போரை வியப்புறச் செய்யும் தன்மை கொண்டதாகும். இங்குள்ள குலசேகராழ்வார், ஆண்டாள் ஆகிய இருவரின் செப்புத் திருமேனிகளும் நமது சிந்தை கவர்வதாகும். திரு மந்திரத்தின் மூன்று பதம் போல் திகழும் மூன்றடுக்குகள் கொண்ட விமானம், அதில் அமைந்துள்ள சிற்பங்களும், மற்றும் பிரதான கோபுரத்தின் மேல் அமைந்துள்ள இராமாயண, மகாபாரத கதை சிற்பங்களும் மிக்க கலையழகு வாய்ந்தவை. இத்தலத்தின் சோமஸந்த விமானத்தின் நிழல் அந்த விமானத்திற்குள்ளேயே விழுமாறு அமைக்கப்பட்டிருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும். |