பக்கம் எண் :

551

எப்படியாவது அழகரை கொண்டு செல்ல வேண்டுமென்று திட்டமிட்டான்.

     இவர்கள் வந்து அழகரை திருடிச் செல்ல எத்தனிக்கையில் இதையறிந்த
இங்கிருந்த ஒரு சாஸ்திரி தமக்கு வேண்டியவர்களை அழைத்துக் கொண்டு
வந்து பதினெட்டுப்பேரையும் பிடித்துப் படிக்கொருவராக புதைத்து வைத்தனர்.

     இந்த பதினெட்டுப்பேரின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு
துணையாக வந்த காவல் தெய்வம் ஒன்று இப்பெருமானின் பேரழகில் மயங்கி
இவரைக் கொண்டுபோக முடியாவிட்டாலும் பரவாயில்லை, இவருக்கு
காவலாவது இருப்போம் என்றெண்ணி, அங்கிருந்த அர்ச்சகரையும், பிறரையும்
நோக்கி தான் இந்தப் பெருமாளின் வாசலையும், இந்தப் பதினெட்டுப்
படிகளையும் காப்பதாக உறுதி கூறி அதற்கு அர்த்தஜாம பூஜாப் பிரசாதத்தைத்
தமக்கு அளிக்க வேண்டுமென்று கேட்க அவர்களும் அதற்கு
ஒப்புக்கொண்டனர். அந்தக் காவல் தெய்வமே பதினெட்டாம்படி
கருப்பணசுவாமியாவான். இவ்விதம் கருப்பணசுவாமி கள்ளழகருக்கு
காவற்கடன் பூண்டான்.

     இன்றும் பொய், சூது, குற்றம், களவு போன்றனபற்றி நடக்கும்
பஞ்சாயத்துக்கள் இவன் முன்னிலையில் பேசப்படுகிறது. நிதர்சனமின்றி
தண்டிப்பவன் கருப்பணசுவாமி என்பது மக்கள் நம்பிக்கை.

     இந்தப் பதினெட்டுப் படிகளைப் பற்றி ஆண்டாள் கூட வியந்ததாய்க்
கூறுவர்.

     19. இங்கு மேற்குப் பிரகாரத்தில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.
இவர் கடுகடுப்பான முகத்துடன் மிகவும் கோபக் கனலுடன் உள்ளார்.
இவருடைய சிரசிலிருந்து கோபக்கினி மேலே கிளம்பிச் செல்வதாக ஐதீகம்.
இவரின் தலைக்கு மேலாக ஒரு சிறு தூவரம் உள்ளது. இந்தக் கோபக்கினியைத்
தணிப்பதற்கு தினமும் எண்ணெய், பால், தயிர் இவற்றாலும் நூபுரகங்கையாலும்
திருமஞ்சனம் உண்டு. இதற்காக 100 ஆண்டுகட்கு முன்பு பச்சையப்ப
முதலியார் ஏற்படுத்திய அறக்கட்டளை இன்றும் தவறாமல் நடந்துவருகிறது.