பக்கம் எண் :

555

92. திருமோகூர்

     நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர்
          தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
     காமரூபங் கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர்
          நாமமே நவின்றென்னுமின் ஏத்துமின் நமர்காள்
                       (3676) திருவாய்மொழி 10-1-10

     என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம், மதுரையிலிருந்து
மேலூர் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை என்ற இடத்திலிருந்து சுமார்
ஒருமைல் தூரத்தில் உள்ளது. மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் நகரப்
பேருந்துகளில் சென்றால் கோவிலருகாமையிலேயே இறங்கலாம்.

வரலாறு.

     பிர்ம்மாண்ட புராணத்திலும் மாத்ஸய புராணத்திலும் பேசப்படுகிறது.
மாத்ஸய புராணத்தில் 11 முதல் 14 வரையுள்ள 4 அத்தியாயங்களில்
பேசப்படுகிறது.

     இத்திவ்ய தேசத்தை “மோகனசேத்திரம்” என்று மேற்படி புராணங்கள்
குறிக்கின்றன. இத்தலம் அமைந்துள்ள இடம் பற்றி, பாண்டிய தேசத்தில்
விருஷபகிரிக்கு (திருமாலிருஞ் சோலைக்கு) தென்திசையில் சுமார் ஒரு
யோசனை தூரத்தில் அஸ்திகிரி எனவழைக்கப்படும் யானை மலை உள்ளது,
அதற்குச் சற்றே தென் கிழக்கில் ப்ரஹம்ம தீர்த்தம் (ஒரு காலத்தில் பிரம்மன்
தவம் செய்து பயன்படுத்திய தடாகம்) என்ற தடாகமுள்ளது. இதனையும்
இதனைச் சூழ்ந்துள்ள இடத்தையும் உத்துங்கவனம் என்பர். அந்த பிரம்ம
தீர்த்தத்திற்கும் இடைப்பட்ட பகுதியே மோஹன சேத்திரம்.

     ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் சென்று மஹா விஷ்ணுவைத்
துதித்து சாகாவரமளிக்கும் அமிர்தம் வேண்டும் எனக் கேட்க, அவ்விதமே
அவர்களுக்கு வழங்குவதாக வாக்களித்த திருமால், தேவர்களுக்கு நன்மை
செய்யும் பொருட்டு பாற்கடலைக் கடைந்து அமுதமெடுக்க ஆயத்தமானார்.

     மந்தர பர்வதம் என்னும் மலையை மத்தாகவும், வாசுகி என்னும்
பாம்பை பெரிய கயிறாகவுங் கொண்டு ஆயிரம் கைகளால் பாற்கடலைக்
கடைந்தனர். கடையப்பட்ட பாற்கடலிலிருந்து முதன்முதலில் காளகூட விஷம்
உண்டானது. அதனைச் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.