அதன்பின் சந்திரன், உச்சைச்சிரவசு என்னும் குதிரை, கற்பக விருட்சம், ஐராவதம் என்னும் யானை, அகல்யை போன்றோர் தோன்றினர். இதன் பிறகு மஹாலட்சுமியும் கௌஸ்துப மணியும் தோன்றின. இறுதியில் தேவர்கள் வெகுகாலமாக வேண்டிப்பட்ட அமிர்தம் உண்டாயிற்று. இதில் உச்சை சிரவசு என்னும் குதிரையும், ஐராவதம் என்னும் யானையும் இந்திரனை அடைந்தன. காமதேனுவை வசிட்டரும், அகல்யயைக் கௌதம முனிவரும், விஷத்தையும் சந்திரனையும், பரமசிவனும் பெற்றார்கள், லட்சுமியும், கௌஸ்துப மணியும் மஹாவிஷ்ணுவைச் சார்ந்தன. அமிர்தத்தை எடுக்க தேவர்கள் விரைந்ததும், அசுரர்களும் ஓடி வந்து தமக்கும் பங்கு கேட்டனர். அமிர்தம் வேண்டிநெடுங்காலம் மஹாவிஷ்ணுவைக் குறித்து துதி செய்தது நாங்கள்தான். எங்கள் வேண்டுதலுக்கு இசைந்து தான் பெருமாள் பாற்கடல் கடைந்தார், எனவே உங்களுக்கு அமிர்தம் கிடையாதென்றனர் தேவர்கள். உடனே தேவாசுர யுத்தம் தொடங்கி விட்டது, யுத்தத்தில் அசுரர்களின் கை ஓங்கிக் கொண்டே வந்ததும், தம்மைக் காப்பாற்றுமாறு தேவர்கள் திருமாலைத் தொழ, தேவரட்சகனான திருமால் ஒரு அழகான மோகினி வேடங்கொண்டு அமிர்தத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தேவர்களையும், அசுரர்களையும் நோக்கி நீங்கள் இரண்டு வரிசைகளாக அமர்ந்து கொள்ளுங்கள் நான் அமிர்தத்தை உங்களுக்குப் பகிர்ந்து தருகிறேன் என்று சொல்ல, தேவர்கள் ஒரு வரிசையிலும், அசுரர்கள் ஒரு வரிசையிலும் அமர்ந்தனர். அசுரர்கள் மோகினியின் அலங்காரத்திலேயே மனதைப் பறி கொடுத்தவர்களாயிருந்து கொண்டு சலன சித்தத்துடன் வீற்றிருக்க, மோகினி அவதாரங்கொண்ட பெருமாள் தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தைக் கொடுத்துக்கொண்டு வந்தார். இதனைக் கண்ட ராகு, கேதுக்களிருவரும் தேவர்களின் வடிவங்கொண்டு தேவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டனர். இவர்களிருவரும் சந்திரனாலும், சூரியனாலும் திருமாலுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டனர். சினங்கொண்ட திருமால் தமது சக்ராயுதத்தால் அவ்விருவரின் சிரங்களைக் கொய்தார். இதனால், சூரீய, சந்திரர் மீது பகைமை பூண்ட ராகு கேதுக்கள் பருவ காலங்களில், சூரிய சந்திரனைப் பிடித்து அவர்களது பலத்தை குறைக்கிறார்கள். |