பக்கம் எண் :

557

     பெருமாள் மோகினி அவதாரங்கொண்டு, திருப்பாற் கடலில்
கடையப்பட்ட அமிர்தத்தை இவ்விடத்திலிருந்து தேவர்கட்கு வழங்கினமையால்
“மோஹன சேத்திரம்” என்றாயிற்று, தூய தமிழில் மோஹினியூராகி,
மோகியூராகி, இறுதியில் திருமோகூராயிற்று.

     திருப்பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து ஒரு துளியானது இந்த
சேத்திரத்தில் விழுந்ததாகவும், அவ்விடத்தில் தேவர்களால் ஒரு குளம்
வெட்டப்பட்டதென்றும், அந்த தீர்த்தத்திற்கு க்ஷீராப்தி தீர்த்தம்
(திருப்பாற்கடல்) என்ற பெயருண்டாயிற்றென்றும் மாத்ஸய புராணம் கூறும்.

     புலஸ்தியர் என்னும் முனிவர் துவாபரயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனை
குறித்து இத்தலத்தில் தவமியற்றினார். பாற்கடல் கடையுங்கால் பெருமாள்
கொண்ட கோலத்தை இச் சேத்திரத்தில் காணவேண்டும் என்று கடுந்தவம்
இயற்றினார். இவரின் தவத்தை மெச்சிய எம்பெருமான், புலஸ்தியர்
விரும்பியவாறே அவருக்கு காட்சிக் கொடுத்தது மட்டுமின்றி, புத்திரப்பேறு
இல்லாதிருந்த புலஸ்தியருக்கு “விச்ருவர்” என்ற பெயர் கொண்ட புத்திரனை
விரைவில் பெறுவதற்கான வரத்தையும் அளித்தார்.

     எனவேதான் இங்கு பாற்கடல் வண்ணனுக்கு திருப்பாற்கடல் நாதனாக
காட்சி தரும்) தனிச் சந்நிதியுள்ளது.

மூலவர்

     காளமேகப் பெருமாள் (நீருண்ட கருமேகம் போன்ற திருமேனியுடன்
கருணைமழைபொழிவதால் காளமேகப் பெருமாள் என்ற திருநாமம்
வரலாயிற்று) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

உற்சவர்

     திருமோகூர் ஆப்தன் (பஞ்சாயயுதங்களுடன் கூடின திருக்கோலம்)
குடமாடு கூத்தன் என்றும் தயரதன் பெற்ற மரகதமணித்தடம் என்றும்
சுடர்கொள் ஜோதியென்றும் உற்சவ மூர்த்திக்கு பல திருநாமங்கள் உண்டு.

தாயார்

     மோஹனவல்லி, திருமோகூர் வல்லி, மோகவல்லி என்ற திருநாமங்கள்.

விமானம்

     கேதச விமானம்