தீர்த்தம் சீராப்தி புஷ்கரணி (திருப்பாற்கடல் தீர்த்தம்) ப்ரஹம்ம தீர்த்தம் (பிரம்மனால் உண்டாக்கப்பட்டது) இதற்கு தெற்கே பாபநாச தீர்த்தமும், வடக்கே ஸ்வர்க்கத்வாரா தீர்த்தமும், மேற்கே நரகாசுர தீர்த்தமும், கிழக்கே பரமன் தீர்த்தமும் உண்டு. காட்சி கண்டவர்கள் பிரம்மா, இந்திரன், புலஸ்தியர், தேவர்கள். சிறப்புக்கள் 1. பிரம்மன் இவ்விடத்தில் திருமாலைக் குறித்து தவம் செய்தார். இதனை பிரம்மாண்ட புராணம், மாத்ஸய புராணம் இரண்டும் ஸ்தல வரலாறு பற்றிக் கூறும் விவரங்களுடன் கலந்து தெரிவிக்கின்றது. நாராயணன் தமது உந்திக்கமலத்திலிருந்து பிரம்மனைப் படைத்த அதே நேரத்தில் அவரது காதுகள் வழியாக, மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர். இவ்விருவரும் பிரம்மனருகே இருந்த வேதப் புத்தகங்களைத் திருடிக் கொண்டுபோய் பாதாள லோகத்தில் மறைத்து வைத்துவிட்டனர். மஹா விஷ்ணு மத்ஸயவதாரம் (மச்ச-மீன்) எடுத்து பாதாளம் சென்று அவ்வேதப்புத்தகங்களை மீண்டும் எடுத்து (ஹயக்ரீவ அவதாரம்) பிரம்மனிடம் சேர்ப்பித்தார். இதனையறிந்த அரக்கர்கள் இருவரும், எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து செல்லக் கூடிய தாமரைத் தண்டினைப் பிடித்து ஆட்டி பிரம்மனுக்கு இடையூறு விளைவிக்கவே மிகவும் சினம்கொண்ட எம்பெருமான் அவ்விருவரையும் பிடித்து தனது தொடையிலடித்து முறித்துக் கடலில் தூக்கி எறிந்தார். அவர்களின் வாயிலிருந்து மிகுதியான ரத்தத்தை தங்கள் உடம்பில் கக்கிக் கொண்டு சமுத்திரத்தில் வீழ்ந்ததால் சமுத்திர ஜலமும் கெட்டியானது. அதற்கு முன் அவனியென்றழைக்கப்பட்டு வந்த இப்பூமி அவ்வரக்கர்களின் கொழுப்பினால் வியாபிக்கப்பட்டு மேடாகி “மேதிநீ’ என்றாயிற்று. இதனால்தான் பூமிக்கு மேதிநீ என்ற பெயரும் வந்த தென்றும் பெரியோர் சொல்வர். (பிர்ம்மாண்ட புராணம், மோஹன ஷேத்ர மஹாத்திமியம் ஸ்லோகம் 26) |