பக்கம் எண் :

559

     தனக்கு மீண்டும் வேத நூல்களை அளித்து அரக்கர்களை அழித்தமைக்கு
நன்றி கூறும் முகத்தான் பிரம்மன் இவ்விடத்திற்கு வந்து ஒரு தடாகம் (பிரம்ம
தீர்த்தம்) உண்டாக்கி பெருமானுக்கு திருவாராதனக் கைங்கர்யத்தை
தினந்தோறும் செய்து வர இறுதியில் எம்பெருமான் பிரத்தியட்சமானார்.

     2. தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்கு இத்தலம் காரணமாக
இருந்தமையால் தேவேந்திரனால் அனுப்பப்பட்ட சிற்பிகளுடன் விஸ்வகர்மாவும்
சேர்ந்து இந்தக் கோவிலின் விமானத்தை (கேதச விமானத்தை) அமைத்தனர்.

     3. மோகினி அவதாரத்துடன் இங்கு நின்று கொண்டிருந்த
மஹாவிஷ்ணுவை, மோகினி என்றே நினைத்த சிவன், அவ்வழகில் மயங்கி,
உன்னழகால் கவரப்பட்ட நான் உன்னை ஆலிங்கனம் செய்து கொள்ள
எத்தனிக்கிறேன் என்று சொல்ல, மோகினியாய் நின்ற விஷ்ணு,
அப்படியேயாகட்டும் என்று சொல்லி தன்னையொத்த இன்னொரு மோகினியை
அங்கே ச்ருஷ்டி செய்துவிட்டு மறைய, இது விஷ்ணுவின் மாயை என்று
தெளிந்த சிவபிரான் “விஷ்ணுவின் மாயையால் யார்தான் மயங்கார்” என்று
தன்னை நொந்துகொண்டு ப்ரமத்தை அடைந்தார். அம்மாயையும் அப்போதே
மறைந்தது.

     (மாத்ஸ்ய புராணம் பதினோராம் அத்தியாயம் ஸ்லோகம் 54 1/2 - 61
1/2)

     4. நம்மாழ்வார் 11 பாசுரங்களாலும், திருமங்கையாழ்வார் ஒரு
பாசுரத்தாலும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

     5. மணவாள மாமுனிகளாலும், பிள்ளைப் பெருமாள் ஐயங்காராலும்
மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

     6. தலைப்பில் கொடுக்கப்பட்ட பாடலைக் கூர்ந்து நோக்கினால்
தேவர்களுக்கும், அசுரர்கட்கும் அமிர்தங் குறித்து நடைபெற்ற யுத்தத்தில்
மோகினியவதாரங் கொண்டு அருள்புரிந்தமை மறைமுகமாக
விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.