பக்கம் எண் :

561

93. திருக்கோட்டியூர்

     கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம்
          கோவிந்தன் குணம்பாடு சீர்
     செம்பொனார் மதில்சூழ், செழுங்கனி
          யுடைத் திருகோட்டியூர்
     நம்பனை நரசிங்களை நவின்றேத்து
          வார்களைக் கண்டக்கால்
          எம்பிரான்றன் சின்னங்கள் இவரிவர்
     ரென்றாசைகள் தீர்வனே
                    (368) பெரியாழ்வார் 4-4-9

     என்று பெரியாழ்வாரால் பாடப்பட்ட இத்திருப்பதி பசும்பொன்
முத்துராமலிங்கர் மாவட்டத்தில் உள்ளது.

     திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை செல்லும் பேருந்துகள் யாவும்
திருக்கோட்டியூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். கோவிலின் வாசலிலேயே
பேருந்துகள் நிற்கும். காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லாமல் நேராக
திருக்கோஷ்டியூர் செல்லும் பேருந்தும் உள்ளது.

வரலாறு.

     பிர்ம்மாண்ட புராணத்தில் 6 அத்தியாயங்களிலும், பிரம்ம கைவர்தத்தில்
இரண்டு அத்தியாயங்களிலும் இத்தலம் பற்றிச் சிறப்பித்துப் பேசப்படுகிறது.

     பிரம்மனைக் குறித்து தவமிருந்த இரண்யன், தனக்கு தேவர்களாலும்,
மனிதர்களாலும், விலங்குகளாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் நேரக்கூடாது
என்று வரம் பெற்று, தேவர்களையுந் துன்புறுத்தி, உலகெங்கும் நமோ
ஹிரண்யாய நமஹ என்றே சொல்லுமாறு செய்து வந்தான். இரண்யனின்
இம்சை பொறுக்காத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவன்
வரங்கொடுத்த பிரம்மாதான் இதற்கு உபாயம் சொல்ல முடியுமென்று சொல்ல
பிரம்மரோ ஸ்ரீமந் நாராயணன் ஒருவனால்தான் இரண்யாட்சகனுக்கு சரியான
முடிவு கட்ட முடியும் என்று கூற எல்லோரும் திருமால் பள்ளிகொண்டுள்ள
பாற்கடலுக்கு விரைந்து பணிந்து நின்று விபரங்கூறினர்.

     இவர்களின் குறையைக் கேட்ட ஸ்ரீமந் நாராயணன் எல்லா
உலகங்களிலும் இரண்யனின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது.