| சிறப்புக்கள். 1. கதம்ப முனி 64 சதுர்யுகங்கள் இப்பூவுலகில் இருந்ததாக பிர்ம்மாண்ட புராணங்கூறுகிறது. எனவே இந்த திவ்யதேசத்தின் தொன்மை எழுத்தில் அடங்கும் தன்மையதன்று. 2. மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். 108 வைணவ திவ்ய ஷேத்திரங்களில் இங்கும் திருக்கூடல் என்னும் மதுரையிலும் ஆகமவிதிகட்குட்பட்ட அஷ்டாங்கவிமானம் அமைந்துள்ளது. முதல் தளத்தில் “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற” திருப்பாற்கடல் நாதனாகப் பள்ளி கொண்ட காட்சி. பாற்கடலில் இருந்து எழுந்துவந்த காரணத்தால் ஷீராப்தி நாதனாக முதல் தளத்திலும், அதன்பிறகு 2வது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் 3வது தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் பெருமாள் எழுந்தருளியுள்ளார். தேவர்களின் நடுவில் நின்றமையால் ஸ்தித நாராயணன் எனவும், ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டதால் உரக மெல்லணையான் என்றும் திருப்பெயர்கள் உண்டாயிற்று. 3. அஷ்டாங்க விமானத்தின் வடபகுதியை மயனும், தென்பகுதியை விஸ்வகர்மாவாகவும் அமைத்தனர். விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட பாகத்தில் இரண்யனைப் பிடித்துக் கொண்ட நரசிம்ம உருவமும், மயனால் செய்யப்பட்ட பகுதியில் இரண்யனைக் கொன்ற நரசிம்ம உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நரசிம்ம மூர்த்திகள் காண்போரை பிரம்மிக்கச் செய்யும் தோற்றமுள்ளவை. 4. அஷ்டாங்க விமானத்தில் தென்திசை நோக்கிய நரசிம்மனுக்கு தெற்காழ்வான் (தட்சினேஸ்வரன்) என்றும், வடதிசை நோக்கிய நரசிம்மனுக்கு வடக்காழ்வான் (உத்தரேசுவன்) என்பதும் திருநாமம். |