பக்கம் எண் :

565

     5. நகக்கிரகங்களில் சந்திரனின் மகன் புதன். இந்த புதனின் மைந்தன்
புருரவன் என்பவன் மிகச்சிறந்த தர்மவானாக இருந்து செங்கோல் செலுத்தி
நாட்டையாண்டுவந்த காலத்தில் கங்கா ஸ்நானம் செய்யும் பொருட்டுதனது
விமானத்திலேறி வரும்போது, இத்திவ்ய தேசத்தின் மேல் பறக்க முடியாதபடி
(அஷ்டாங்க விமானத்தின் சக்தியால்) தரையிறங்க நேர்ந்ததும் அதன்பின்
இங்குள்ள பெருமானின் சக்தியறிந்து வழிபட்டு, இத்திருக்கோவிலைச் சுற்றி
அந்தணர்களும், பெரியோர்களும், வாழ்வதற்குரிய அழகிய நகரத்தை
நிர்மாணித்துச் சென்றான்.

     (இக்கதை பிரம்ம கைவர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது.)

     6. மற்ற ஸ்தலங்களில் உள்ளதைப்போன்று பஞ்ச லோகங்களால்
அமையாது, தூய வெள்ளியில் உற்சவருக்கு விக்ரகமிருப்பது இன்னொரு
சிறப்பாகும் (இச்சிலை இந்திரன் கொடுத்ததாக ஐதீகம்) வெள்ளியான் கரியான்
மணி நிற வண்ணன் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்
செய்யப்பட்டது.

     7. வைணவ மத வளர்ச்சியில் ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு ஏற்றமுண்டோ
அதற்குச் சமமான ஏற்றம் இந்த திருக்கோட்டியூருக்கு உண்டு. “திருமந்திரம்
விளைந்த திவ்ய தேசம்” என்ற திருப்பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
இராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து 17 முறை இங்குவந்து திருக்கோட்டியூர்
நம்பிகளிடம் ஞானம் பெறமுயல, 17 முறையும் பல காரணங்களைக் கூறி
திருப்பியனுப்பி இறுதியாக 18வது முறை வந்தபோது இராமானுஜருக்குத்
“திருமந்திர உபதேசம்” செய்வித்து இதனை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது.
அவ்வாறு குருவின் கட்டளையை மீறித் தெரிவித்தால் உமக்கு நரகம்தான்
கிடைக்குமென்றார்.

     சரி, என்று ஒப்புக்கொண்ட இராமானுஜர் அவரிடம் விடைபெற்றுக்
கொண்டு திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி “எல்லீரும் வாருங்கள்,
திருமந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உரக்கக் கூவி திருமந்திரத்தை
எப்படி உச்சரிப்பதென்பதை எல்லோருக்கும் தெரிவித்தார்.