பக்கம் எண் :

576

இடுக்குகளை அப்பாதையின் (சேது அணையின்) நெடுகில் இருந்த மணலில்
விழுந்து புரண்டு தம் மேனி முழுவதும் ஒட்டிக்கொண்டு இருந்த மணலைக்
கொண்டு சென்று அவ்விடுக்குகளில் தண்ணீர் புகாமல் மணலை உதறி
அடைத்து கைங்கர்யம் (பணிவிடை) செய்தனவாம் அணில்கள்.
எம்பெருமானுக்கு அந்த அணில்களைப் போலக்கூட நான் ஒரு சேவை
செய்திலேன். வறிதே நின்றிருக்கும் மரங்கள் போல் வலிய நெஞ்சு
படைத்தவனாகிவிட்டேன். வஞ்சகனாகி விட்டேன். அரங்கத்து
எம்பெருமானுக்கு ஆட்படாமல் எளியேன் அயர்கின்றேனே என்று, இந்த
சேதுக்கரைப் பெயரைச் சொல்லாமல் மறைமுகமாக மங்களாசாசனம் செய்கிறார்.

     குரங்குகள் மலையை நூக்கக்
          குளித்துத் தாம் புரண்டிட்டோடி
     தரங்க நீரடைக்கலுற்ற
          சலமிலா அணிலம் போலேன்
     மரங்கள் போல் வலிய நெஞ்ச
          வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
     அரங்கனார்க் காட்செய் யாதே
          அளியத்தே னயர்க்கின் றேனே - 898

     இவ்விதம் சேது அணையும் ஆழ்வார்களின் மங்களாசாசனங்களைப்
பெற்றதால் திருப்புல்லாணி திவ்ய தேசத்தைத் தரிசித்தபின் இந்த
சேதுக்கரைக்கு வந்து சேது அணை இருக்கும் திக்கை நோக்கித் தொழுது கடல்
நீராடிச் செல்வர். தற்போது இவ்வணை கடலுக்குள் அமிழ்ந்துவிட்டது.
இங்குள்ள மீனவர்கள் தமது சிறு படகுகளில் கடலுக்குள் மூழ்கியுள்ள
இவ்வணையருகே பக்தர்களை அழைத்துச் சென்று காட்டி வருவர்.
எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த
நிகழ்வினை சமீபகால விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. ஆம். விண்வெளியில்
உலகைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளிக்கலம் ஒன்று இந்த சேது
அணையை முழுவதுமாகப் படம் பிடித்துக் காட்டி நம் புராணங்கூறுவது
யாதும் பொய்யே அல்லவென்றும், முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல
என்றும் நிரூபணம் செய்துள்ளது.