96. திருஅயோத்தி சுற்ற மெல்லாம் பின் தொடர தொல்கானம் அடைந்தவனே அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத் தென் கருமணியே சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ (724) பெருமாள் திருமொழி 8-6 | சிற்றன்னையின் சொல் மூலமாக தந்தை தயரதன் ஆணையை சிரமேற்கொண்டு தொன்மையான கானகம் அடைந்த ஸ்ரீராமனே, ஞானம் அற்றவர்கட்கு அருமருந்தாய் திகழ்ந்து திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அயோத்தி நகரதிபதியே ஸ்ரீராமனே தாலேலோ, என்று குலசேகராழ்வாரால் தாலாட்டுப் பாவினால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்திருத்தலம் வட இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. உ.பி. தலைநகரமான லக்னோவிலிருந்து ரயில் மார்க்கமாக பைசாபாத் அல்லது பைசலாபாத் எனப்படும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் உள்ளது. எங்கு நோக்கினும் ராம, சீத்தா பிராட்டியின் கோவில்களும், ராம பஜனையும் ராம பக்தர்களுமாகத் திகழ ஒரே ராம மயமாகத் திகழ்கிறது இந்த ராமஜென்மபூமி. வரலாறு புராணங்கள் யாவற்றிலும், எண்ணற்ற இலக்கியங்களிலும், கணக்கிலடங்கா நூல்களிலும் இந்த அயோத்தி விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்காந்த புராணத்தில் மீன் வடிவில் அமைந்திருக்கும் நகரம் என்று வர்ணிக்கப்படும் அயோத்தி வேதத்திலேயே அயோத்யா என்ற சப்தம் பெற்றுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. “செங்கண்மால் பிறந்து தனிச் சிறப்புடன் ஆண்டு அளப்பருங்காலம் திருவின் வீற்றிருந்தான்” என்கிறான் கம்பன். திருவயோத்தியென்றும் அயோத்தி நகர் என்றும் மாந்தி மகிழ்வர்கள் ஆழ்வார்கள். | |
|
|