பக்கம் எண் :

589

கோவில்களிலும் இந்த நாமம் ஒலிக்காத நாளும், ஒலிக்காத நேரமும் இல்லை
என்று சொல்லலாம். ராம நாமத்தின் மகிமையும் எழுத்தில் எழுதி
விரித்துரைக்கும் தன்மையதன்று. சொன்ன மாத்திரத்தில் ராம பாணம் போல்
பாவங்களைச் சுட்டெரிக்கவல்லது. திருவாரூரில் பிறந்த தியாகராஜ சுவாமிகள்
ராம நாம மகத்துவம் பற்றி இயற்றியுள்ள கீர்த்தனங்கள் இம்மண்ணுள்ளவரை
அழியா மகத்துவம் பெற்றவைகளாகும். ராம நாமம் ஜென்ம ரட்சக மந்திரம்
என்றார் போல் ராம நாமத்தை உலகிற்குப் பயந்த சிறப்பே அயோத்தியின்
தனிச் சிறப்பும், தலையாய சிறப்புமாகும்.

     இராம நாமத்தின் மகிமை பற்றியும், இராம நாமத்தைச் சொல்வதால்
ஏற்படும் மகத்துவம் பற்றியும், கம்பர்,
 

     நன்மையும், செல்வமும் நாளும் பெருகுமே.
     தின்மையும், பாவமும் சிதைந்து தேயுமே
     சென்மமும், மரணமும் இன்றித் தீருமே
     இம்மையே ராமாவென்ற இரண்டெழுத்தினால் என்றும்,
     நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்.
     விடியல் வழியதாக்கும் வேரிஅம் கமலை நோக்கும்
     நீடிய அரக்கர்சேனை நீறுபட்டழிய வாகை
     சூடிய சிலை ராமன் தோள்வலி கூறுவார்க்கே
                               என்றும் பகர்கிறார்.

     2. ராமனைப் பற்றி மண்டோதரி கூறுகிறாள். ரகு வம்ச மணி ராமன்
விஸ்வரூபன். அவனுடைய ஒவ்வோர் அங்கத்திலும் லோகங்கள் இருக்கிறது.
பாதாளம் அவரது சரணம் (பாதங்கள்). பிரம்மலோகம் அவரது சிரசு. கதிரவன்
அவனது கண். மேகம் அவனது கேசம். அஸ்வினி குமாரர்கள் அவனது நாசி.
அவர் இமைப்பதே இரவு பகல். பத்து திசைகளும் அவனது செவி. அவனது
நாமம் ஒன்றே எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்க வல்லது,
என்று வேதம் ஒலிக்கிறது. எனவே சாட்சாத் ஸ்ரீராமனே தெய்வம் என்பதில்
சந்தேகமில்லை. அவர் மீது கொண்ட பகைமையை விடுக என்று ராவணனிடம்
அவனது மனைவி மண்டோதரி மன்றாடுகிறாள்.