3. இட்சுவாகு வம்சத்தார்கள் தவமிருந்து பிரம்மனிடம் பெற்ற பள்ளிகொண்ட நாதனை முதன்முதலில் பூவுலகில் வைத்து தலைமுறை தலைமுறையாக வழிபட்டது இங்குதான். பிற்காலத்தில் தான் அந்த இட்சுவாகு குலதனம் விபீடணன் மூலமாக திருவரங்கத்தில் அரங்க நாதனாக பள்ளி கொண்டது. பரமபதத்தின் ஒரு பகுதி பூலோகத்திற்கு வந்ததும் இந்த அயோத்திக்குத் தான். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டவன் பூவுலகிற்கு வந்து முதன் முதலாக வழிபாடுகளையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டது இங்குதான். திரேதாயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனே (விபவ அவதாரமாக) ஸ்ரீராமனாக இங்கு அவதரித்தார். இதன் பெருமைகளை எளிதில் சொல்லிடவும் முடியுமோ. 4. சூரிய வம்சத்து மன்னர்களால் ஆளப்பட்டு 7 புண்ணிய மோட்ச புரிகளில் முதன்மை பெற்றதும், சரித்திர கோசல ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கியதும் மனு என்னும் மன்னரால் கட்டப்பட்டதுமான இந்த அயோத்தியை, மாந்தாதா, அரிச்சந்திரன், பாகீ ரதன், தீலிபன், ரகு, போன்ற புகழ்பெற்ற சூரிய வம்சத்து மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். 5. இந்த அயோத்தியை (அதாவது அன்றைய அயோத்தியா ராஜ்யத்தை) ராமன் தனது புதல்வர்களான லவ குசனுக்கும், பரதனின் குமாரர்களான தசு- புஷ்கலனுக்கும், லட்சுமணனின் புதல்வர்களான அங்கத, சந்திர கேசனருக்கும், சத்துருக்கன் புதல்வர்களான சூரஸேன, சூடாஹி ஆகியோருக்கும் 8 பாகங்களாகப் பகிர்ந்து கொடுத்தார். 6. பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களால் 13 பாக்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும். ஆழ்வார்களால் பாடப்பட்ட மூர்த்திகள் தற்போது இல்லையாயினும் அயோத்தி நகரத்தையே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளதால் இங்குள்ள அனைத்து வைணவத் தலங்களும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகவே கொள்ளலாம். குலசேகராழ்வார் ராமாயணம் முழுவதையும் 10 பாக்களில் பாடி ராமாயண காவியத்தையும் மங்களாசாசனம் செய்துவிட்டார். |