பக்கம் எண் :

591

     7. இங்கு ராம, லட்சுமண, சீதை, அனுமார் ஆகியவர்கட்கும் எண்ணற்ற
சின்னஞ்சிறு கோவில்கள் உண்டு. எங்கு நோக்கினும் ராமபிரான் சந்நிதிகளே.
பைசாபாத் ரயில் நிலையத்திலிருந்து அயோத்தி வரும் வழியில் எண்ணற்ற
ஆஞ்சநேயர் கோவில்கள் ஆங்காங்கே வழி நெடுக இருப்பது நம்மை
ஆஞ்சநேயரே ராமபிரானிடம் அழைத்துச் செல்வதுபோல் உள்ளது.

     8. இங்கு அமைந்துள்ள கனகமந்திர் என்னும் மண்டபத்தில் (மந்திர்
என்றால் இந்தியில் கோவில் என்று பொருள்) கனகமந்திர் என்னும் இவ்விடம்
ஒரு மண்டபம் போல் காட்சியளிப்பதால் மண்டபம் என்றே
எடுத்தாண்டுள்ளோம். இராமாயணக் காட்சிகள் யாவும். வெகு நேர்த்தியாகவும்.
பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இதன் முகப்பில்
தங்கம் பதித்திருப்பதால் கனக மந்திர் என்னும் பெயருண்டாயிற்று. இங்கு
துறவிகள் இருவர் நடத்திக் கொண்டிருக்கும் ராம பஜனை கேட்பதற்கும்,
பார்ப்பதற்கும் பேரழகு பொருந்தியதாகும்.

     9. இராம சரித்திரத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை
இன்றும் அயோத்தியில் காணலாம். சீதாதேவி தினமும் துளசி பூஜை செய்த
துளசி மாடம், இராமபிரானுக்கும் அவரது தம்பிகட்கும் திருமணம் நடந்த
இடம், ராமன் பட்டாபிசேகம் செய்த இடம் (இந்த இடம் இன்று ஒரு
நந்தவனம் போல் உள்ளது) சீதையின் தகப்பனார் ஜனகர் தங்கியிருந்த இடம்,
அஸ்வமேத யாகம் நடத்தப்பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர்
ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களைக்
காணும் போது இராமாயண காலத்தோடு கலந்து ஒன்றிவிட்ட உணர்வு
ஏற்படுகிறது.

     10. பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும்வரை
காத்திருந்த நந்திகிராமம் (நந்திகிராமம் அயோத்தியிலிருந்து 20 மைல்)
லகட்மண்டி என்றழைக்கப்படும் இடமான தசரதன் புத்திர காமேஷ்டி செய்த
இடம், அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கனகபவனம்
என்றழைக்கப்படும் கைகேயியின் அரண்மனை ஆகிய ஒவ்வொன்றையும்
காணும்போது ராமாயண காலத்தில்

     வாழ்ந்தது போன்று உணர்வுகள் தலைதூக்கும்.