பக்கம் எண் :

592

     11. அயோத்தியென்றதும் சரயு நதிதான் சடக்கென்று நினைவுக்கு வரும்.
இந்நதி இமயத்திற்குள் உற்பத்தியாகி அயோத்தியில் நுழைகிறது.
அயோத்திக்குள் நுழையுமுன் இதனுடன் காளி என்னும் நதி கலந்துறவாடுகிறது.
இப்போது இதனை கோக்ரா என்று அழைக்கின்றனர். இந்த சரயு நதியில்
உள்ள ராம்காட் என்னுமிடத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்
எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.
மேலும் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம், குப்தகாட், லட்சுமணகாட்
போன்றனவும் முக்கிய தீர்த்தங்களாகும்.

     ஸ்ரீராம அவதாரத்தின் காலகட்டம் முடிவுற்றதை எமதர்மன் ஒரு
தபசியின் ரூபத்தில் வந்து இராமனுக்கு நினைவு படுத்த ராமன் இந்தச் சரயு
நதிக்குச் சென்று தமது சரீரத்தை சரயுநதியில் கரைத்து விட்டுப் பரமபதம்
சென்றார். இந்த இடம் குப்த காட் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

     ராமன் தனது சரீரத்தைக் களைந்து பூத உடலைத் துறந்து இந்தச்
சரயுநதியில் நீராடுவது மோட்சத்தை நல்கும் என்ற நம்பிக்கையில் இங்கு
வருவோரனைவரும் இதில் நீராடுவர்.

     12. அநுமான்கடி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி
கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. ஐம்பது
படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடினதாக
கம்பீரத்தோற்றத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. இந்த ஆலயத்தின்
சுற்றுப்புறங்களிலும், மண்டபங்களிலும், படிக்கட்டுகளிலும் இடைவிடாமல்
ராமாயணம் படித்துக்கொண்டிருக்கும் பக்தர்களைக் காணும்போது இந்து
மதத்தின் தார்மீக வளர்ச்சியை எவரும் அசைத்துவிட முடியாது என்று
சொல்லாமற் சொல்வது போல் உள்ளது.

     13. சரயு நதிக்கருகில் அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு
கோவில் உள்ளது. தென்னிந்திய கோவில்களின் பாணியில் கட்டப்பட்டுள்ள
இத்தலத்தில் தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன்
சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ள இத்தலம் புராதன
காலந்தொட்டு இதே இடத்தில் எச்சிதைவு இல்லாது அமைந்துள்ளது.